×

அரசு ஆயுர்வேத கல்லூரியில் காட்டு வவ்வால்கள் அட்டகாசம்-பாத்திரங்களை தட்டி விரட்டும் ஊழியர்கள்

நாகர்கோவில் : நாகர்கோவில் கோட்டாறு அரசு ஆயுர்வேத கல்லூரியில் காட்டு வவ்வால்கள் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. நாகர்கோவில்  கோட்டாறு பகுதியில் உள்ள பழமையான அரச மரங்களில் வவ்வால்கள் கூட்டம்   கூட்டமாக வசித்து வருகின்றன. இரவில் பழங்களை உண்ணும் இந்த வவ்வால்கள்   பகலில் இந்த மரங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றன.அவற்றை சிலர்  வேட்டையாடியதால், வனத்துறை சார்பில், வேட்டையாடக் கூடாது என எச்சரிக்கை  பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில்,  கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவ  கல்லூரியில் முகப்பில் அரச மரம் உள்ளது.  இம்மரம் இருப்பதால்  இப்பகுதியில் கடும் கோடையிலும் கூட  நிழலும், இதமான  குளிர்ச்சியும் நிரம்பி உள்ளது. கடந்த மாதம் இந்த மரத்தில் இலைகள்  முற்றிலும் உதிர்ந்து தற்போது மீண்டும் பச்சை பசேல் என துளிர்த்து  கண்ணுக்கு இதமாக காட்சி தருகிறது.

இந்நிலையில், கடந்த சில  நாட்களாக இந்த மரத்தில் காட்டு வவ்வால்கள் கூட்டம் கூட்டமாக தஞ்சம்  அடைந்துள்ளன. இந்த வவ்வால் கூட்டம், எச்சங்களை பொழிவதால், இந்த பகுதியில்  தரை மற்றும் கார்கள் அசுத்தமாகிறது என புகார் எழுந்தது. எனவே வவ்வால்களை விரட்ட பட்டாசு வெடிக்கப்பட்டது. எனினும் அவை  கலைந்து  செல்ல வில்லை என்பதால், பாத்திரங்களை கொண்டு சத்தம் எழுப்பி  விரட்ட முயன்றனர். ஆனாலும் அவை கலைந்து செல்வதாக இல்லை. இதனால்,  வவ்வால்களை  எப்படி விரட்டுவது, என அங்குள்ள ஊழியர்கள் தவித்து போயுள்ளனர்.

விவசாயிகளின் நண்பன்

இதுபற்றி மாவட்ட வன அலுவலர் இளையராஜாவிடம் கேட்டபோது, வவ்வால்கள் விவசாயிகளின் நண்பன். அவற்றால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. இவற்றின் எச்சங்களில் பாஸ்பரஸ் உள்ளிட்ட தாதுக்கள் உள்ளதால், அவை சிறந்த உரமாகும். மேலும் மகரந்த சேர்க்கை,  பழத்தின் விதைகளை  எச்சம் மூலம் வெளியேற்றுவதால், வனங்கள் செழிக்கும். பயிர்களுக்கு தீங்கு தரும் பூச்சிகள், மலேரியா, டெங்கு உருவாக்கும் கொசுக்களை கூட இவை அழிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா காலத்தில் தவறான தகவல் காரணமாக சில வெளிமாவட்டங்களில் வவ்வால்களை விரட்டி விட்டு, இப்போது அவை வராதா என ஏங்குகின்றனர் என்றார்.

Tags : Wild ,Vavwals ,Govt Ayurveda College , Nagercoil: The Kottaru Government Ayurveda College in Nagercoil is stinking due to wild bats. Nagercoil
× RELATED ‘எக்ஸ்கியூஸ் மீ… சாப்பிட என்ன...