×

சோளிங்கரில் பாதிக்கப்பட்ட 2 மாணவிகளுக்கு அனைத்து தேவைகளையும் அரசு பூர்த்தி செய்யும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

சென்னை: சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின் போது அரக்கோணம் எம்எல்ஏ ரவி (அதிமுக) பேசுகையில் ‘‘ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 2 மாணவிகள் உடல்நல பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பாதிப்பு, தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதாலா அல்லது வேறு ஏதோ காரணத்தினாலா என்பது குறித்து ஆராய வேண்டும்” என்றார். இதற்கு பதில் அளித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: ராணிப்பேட்டை மாவட்டம், எத்திராஜ் அம்மாள் முதலியாண்டான் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் 17 வயது, ஆர்.யோகலட்சுமி மற்றும் அதே பள்ளியில் படித்து வரும் 15 வயது பி.பிரியதர்ஷினி என்பவர்கள் கடந்த ஜனவரி 4ம் தேதி மற்றும் பிப்ரவரி 2ம் தேதி கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தடுப்பூசி அளிக்கப்பட்டவுடன் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

பின்னர் சில நாட்கள் கழித்து, மாணவி ஆர்.யோகலட்சுமிக்கு கண் பார்வை பிரச்னை இருப்பதாக தெரிவித்ததின் பேரில், உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டன. இதை ஆய்வு செய்த குழுவின் அறிக்கையில் யோகலட்சுமிக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தியதற்கு பிறகு ஏற்பட்ட பின்விளைவுகளுக்கும் தடுப்பூசி செலுத்தியதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், பிரியதர்ஷினிக்கு Guillain-Barre syndrom என்னும் நோயாக இருக்கலாம் என்ற நிலையில், தடுப்பூசி செலுத்தியதால் ஏற்பட்ட பாதிப்பா என அறிய, இவ்வறிக்கையினை மேல் பரிசீலனைக்காக இந்த தகவல்கள் National Adverse Events Following Immunization, New Delhi-க்குஅனுப்பப்பட்டுள்ளன. கூடிய விரைவில் இந்த நோய்க்கான காரணத்தை கண்டறிந்து மக்களுக்கு வெளிப்படுத்துவோம். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் தமிழக அரசு பூர்த்தி செய்யும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Government ,Cholingar ,Minister ,Ma Subramaniam , Government will meet all the needs of the 2 students affected in Cholingar: Minister Ma Subramaniam's speech
× RELATED வறட்சி நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க...