×

தண்டையார்பேட்டை மருத்துவமனையில் ரூ.2 கோடியில் ஆக்சிஜன் மையம்: அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா திறந்து வைத்தனர்

தண்டையார்பேட்டை: சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அரசு தொற்றுநோய் மருத்துவமனையில் காசநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு காச நோய்க்கான சிறப்பு சிகிச்சை வார்டு திறப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.  இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் காச நோய் சிறப்பு வார்டை திறந்து வைத்தனர். துணை மேயர் மகேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர் உட்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது, காசநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் காசநோயை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து மாநகராட்சி மேயர் பிரியா விளக்கி பேசினார்.

இதையடுத்து, ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் அமைப்பு சார்பில், காச நோய் மருத்துவமனையில் ரூ.1 கோடியே 95 லட்சம் செலவில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர்  இயக்கி வைத்தனர். இதில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் அறங்காவலர் கணேஷ்மணி உட்பட பலர் கலந்துகொண்டனர் .

நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டாலும்,  வைரஸ் பரவலை தடுக்க முகக்கவசம் அணிவது, கைகளை கழுவுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டுமென முதல்வர் கூறியிருந்தார். இதை அனைவரும் கட்டாயம் பின்பற்றவேண்டும். தற்போது  நிகழ்ச்சிக்கு வந்துள்ள பலரும் முகக்கவசம் அணியாமல் இருக்கின்றனர். அனைவரும் முகக்கவசம் அணிந்து கைகளை கழுவி பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என்றார். நிகழ்ச்சியில், திமுக பகுதி செயலாளர்கள் ஜெபதாஸ் பாண்டியன், லட்சுமணன், கவுன்சிலர் நேதாஜி, கணேசன் மற்றும் மருது கணேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Thandayarpet Hospital ,Minister ,Sekarbabu ,Mayor ,Priya , Thandayarpet, Hospital, Rs. 2 crore, Oxygen Center, Sekarbapu,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...