×

உடன்குடி வட்டாரத்தில் சீசன் துவங்கியது பதநீர் எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்: ஒரு லிட்டர் ரூ.120க்கு விற்பனை

உடன்குடி: உடன்குடி வட்டாரத்தில் பனை மரங்களில் இருந்து பதநீர் எடுக்கும் பணியை துவக்கியுள்ள தொழிலாளர்கள், தற்போது லிட்டருக்கு ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தில் பனை மரங்கள் அதிகளவில் உள்ளன. ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய 5 மாதங்களில் வழக்கமாக பனைத்தொழில் மும்முரமாக நடைபெறும். முதல் கட்ட பணியாக பனை மரத்தில் உள்ள காய்ந்த ஓலைகள், சில்லடைகள், பனை மட்டையில் உள்ள கருக்கு ஆகியவற்றை அப்புறப்படுத்தி விட்டு பனை ஓலைகளை விரித்து விடுவது வழக்கம்.

இவ்வாறு மேற்கொள்ளப்படும் பனை மரத்தில் பதநீர் தரும் பாளைகள் வேகமாக வெளிவரும். தற்போது பதநீர் போடும் பாளைகள் வந்து விட்டன. இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம், தூத்துக்குடி மாவட்டம் வேம்பார், நெல்லை, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் வரவழைக்கப்பட்டுள்ள பனைத்தொழிலாளர்கள் பனங்காட்டில் தங்கியிருந்து பனை மர பாளைகள் முற்றிவிடாமல் இருக்க அதை இடுக்கி, பக்குவப்படுத்தியும், அரிவாளால் சீவி பதநீர் கலசத்தில் விழும்படி கயிற்றினால் கட்டியுள்ளனர்.

தற்போது ஒரு லிட்டர் பதநீர் ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது. முன்பெல்லாம் பனைமரங்களில் ஏறி பதநீர் இறக்குவதற்கு காலில், தளை கயிற்றை மாட்டி மரத்தை நெஞ்சோடு அணைத்து ஏறி இறங்குவர். தற்போது, கம்புகளால் பனை மரத்தில் கீழேயிருந்து மேலே வரை ஏணி போல் தடுப்புகள் கட்டி ஏறி, இறங்குகின்றனர். பிடித்து ஏறுவதற்கு வசதியாக மரத்தின் மேல்புறத்திலிருந்து கயிறு கட்டி தொங்க விட்டுள்ளனர்.

Tags : Udankudi , bathani, 120,
× RELATED தேரியூர் கோயிலில் பூக்குழி திருவிழா