×

ஆரல்வாய்மொழி அருகே வாகன சோதனையில் 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்-2 டெம்போக்கள் சிக்கின டிரைவர்கள் தப்பி ஓட்டம்

ஆரல்வாய்மொழி :ஆரல்வாய்மொழியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது 2 டெம்போக்களில் கடத்தி வரப்பட்ட 10 டன்  ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய 2 டெம்போ டிரைவர்களையும் தேடி வருகின்றனர். கன்னியாகுமரி  மாவட்டம் வழியாக அண்டை மாவட்டமான திருநெல்வேலியில் இருந்து  கனிமவளங்கள், கேரளாவுக்கு அதிக அளவில்  விதிகளை மீறி கொண்டு செல்லப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட  கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அடுக்கடுக்கான புகார்கள் வந்தன.

இதேபோல் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்ற ரேஷன் அரிசியையும்  சில கும்பல்கள் மொத்தமாக வாங்கி, அதிக விலைக்கு கேரளாவில் விற்பனை  செய்வதாகவும், அதற்காக வாகனங்களில் நூதன முறையில் கடத்துவதாகவும்  காவல்துறைக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. அதன்படி அந்தந்த பகுதியில் உள்ள  காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டு இரவு நேர வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

 ஆரல்வாய்மொழி போலீசார்  திருநெல்வேலியில் இருந்து வாகனங்கள் வருகின்ற வழிதடங்களில் தீவிர வாகன  சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அதிகாலை ஆரல்வாய்மொழி  போலீசார் புதிய நான்கு வழி சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது குமாரபுரம் வழியாக நான்கு வழிச்சாலையில் 2 டெம்போக்கள் வந்து  கொண்டு இருந்தன.
போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு  இருப்பதை பார்த்ததும், டெம்போ ஓட்டுநர்கள் வாகனத்தை வேகமாக ஓட்ட முயன்றனர்.  இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்தை விரட்டி சென்றனர்.   சுதாரித்துக் கொண்ட டிரைவர்கள் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி  ஓடிவிட்டனர்.  போலீசார் டெம்போவில் பின்புறம் தார்ப்பாய் மூலம்  மூடப்பட்டிருந்த பகுதியை திறந்து பார்த்தனர்.

 அதில் மூடை  மூடையாக ரேஷன் அரிசி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஒரு டெம்போவில்  சுமார் 5 டன் வீதம் 2 டெம்போக்களிலும் சேர்த்து மொத்தம் சுமார் 10 டன் வரை  ரேஷன் அரிசி இருந்தது .  போலீசார் 2  டெம்போக்களையும் பறிமுதல் செய்து ஆரல்வாய்மொழி காவல்  நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
 டெம்போக்களில் இருந்த ஆவணங்களின் அடிப்படையில் அவற்றின் உரிமையாளர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்?  ரேஷன் அரிசி  எங்கிருந்து கடத்தி  வரப்படுகிறது? கடத்தலுக்கு பின்னணியில்  இருப்பவர் யார்? என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Aralvaymozhi , Aralvaymozhi: Aralvaymozhiyil 10 ton ration smuggled in 2 tempos during a police vehicle search
× RELATED ஆரல்வாய்மொழி அருகே அனுமதியின்றி ஜெப கூட்டம் நடத்த எதிர்ப்பு