×

ஆரல்வாய்மொழி அருகே அனுமதியின்றி ஜெப கூட்டம் நடத்த எதிர்ப்பு

ஆரல்வாய்மொழி, டிச.27:  ஆரல்வாய் மொழி  அருகே அனுமதியின்றி ஜெப கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர். ஆரல்வாய்மொழி  அருகே  தாழக்குடி சந்தைவிளையில் ஒருவர் புதிதாக 2 மாடி வீடு  கட்டியுள்ளார். இந்த வீட்டில் கடந்த சில வாரங்களாக ஜெப கூட்டம் நடத்தியதாக  கூறப்படுகிறது. இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸ் மற்றும் தோவாளை தாசில்தார்  அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள்  சம்பந்தப்பட்ட வீட்டினரை அழைத்து இதுபோன்று அனுமதியின்றி வீட்டில் வைத்து  ஜெப கூட்டம் நடத்த கூடாது என்று அறிவுரை வழங்கினர்.

இந்தநிலையில் நேற்று மீண்டும் இந்த வீட்டின் மாடியில்  ஜெபகூட்டம் நடந்தது.  சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சில குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.  இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராஜேஸ்வரன், செயலாளர் கண்ணன்,   அமைப்பாளர் சங்கர் என 100க்கும் மேற்பட்டோர் அந்த வீட்டின் முன் திரண்டு  போராட்டதில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் டவுன் டிஎஸ்பி  நவீன்குமார், ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீசார் வந்தனர்.  தொடர்ந்து பாதுகாப்புக்கு 30க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.  இதையடுத்து இருதரப்பினரிடம் தாசில்தார் தாஜ் நிஷா, துணை தாசில்தார்  ஆறுமுகம், டிஎஸ்பி நவீன்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது,  ஜெப கூட்டம் நடத்தியவர்களிடம் முறையான அனுமதி பெற்று தான் ஜெப கூட்டம்  நடத்த வேண்டும்.இது சம்பந்தமாக நாகர்கோவில் கோட்டாட்சியர் முன்னிலையில்  பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும். அதுவரை ஜெபக்கூட்டம் நடத்த  கூடாது என்று கூறினர். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த  சம்பவத்தால் நேற்று காலை தாழக்குடி பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags : Aralvaymozhi ,
× RELATED ஆரல்வாய்மொழியில் தேவசகாயம் புனிதர்...