மேலூர் அருகே காரில் ரூ.2.5 கோடி ‘அம்பர் கிரீஸ்’ கடத்திய மூன்று பேர் கைது

மேலூர் : மேலூர் அருகே கடத்திச் செல்லப்பட்ட ரூ.2.5 கோடி மதிப்புள்ள ‘அம்பர் கிரீஸ்’ எனப்படும் திமிங்கல எச்சம் கைப்பற்றப்பட்டது.மதுரை மாவட்டம், மேலூர் சிவகங்கை சாலையில் நேற்று முன்தினம் இரவு எஸ்பி தனிப்படை எஸ்ஐ நாகநாதன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சிவகங்கையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம், நத்தம் நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி விசாரித்தனர். அதில் இருந்த 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். சந்தேகமடைந்த போலீசார், காரை சோதனையிட்டனர். அதில், ‘அம்பர்கிரீஸ்’ எனப்படும் திமிங்கல எச்சம் 2.5 கிலோ இருந்தது. இதன் மதிப்பு ரூ.2.5 கோடி ஆகும்.

இதையடுத்து காரில் இருந்த லிங்கவாடியை சேர்ந்த அழகு, திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சீர்வீடு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி, நத்தத்தை சேர்ந்த குமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் வந்த சொகுசு கார் மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. திமிங்கல எச்சம் வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் அளித்த புகாரின்பேரில் மேலூர் போலீசார் வழக்கு பதிந்து, இந்த எச்சம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: