×

கண்ணகி சிலையை அகற்றியது யார்? பேரவையில் சூடுபிடித்த விவாதம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2022-23ம் ஆண்டுக்கான பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுகள் மீதான 2வது நாள் விவாதத்தில் ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) பேசியதாவது: உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஒன்றிய அரசு ரூ.20,000 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை கொடுக்கவில்லை. இதற்காக தமிழக பாஜ உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும். திருச்செங்கோட்டில் கண்ணகி விழா கடந்த 27 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அங்கு கண்ணகி கோட்டம் கட்ட வேண்டும். கடந்த ஆட்சியில் இந்த கோரிக்கை வைத்தும் நிறைவேற்றவில்லை. அவர்கள், கண்ணகிக்கு ஏன் கோட்டம் கட்டவில்லை என்று எல்லோருக்கும் தெரியும். மெரினா சிலையில் இருந்த கண்ணகி சிலையையே எடுத்தார்கள்.

(உறுப்பினரின் பேச்சுக்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.)
செங்கோட்டையன் (அதிமுக): கண்ணகி சிலையை அகற்றியது அதிமுகவினர் என்று குறிப்பிட்டுள்ளார். அதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு: அவர் யாரையும் தனிப்பட்ட முறையில் ஒரு இயக்கத்தின் பெயரையோ, ஒரு சட்டமன்ற உறுப்பினர் பெயரையோ சொல்லவில்லை. பொத்தாம் பொதுவாகத்தான் கண்ணகி சிலை அகற்றப்பட்டது என்றார்.

ஈஸ்வரன்: நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை அகற்றப்பட்டதா, இல்லையா?

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: கண்ணகி சிலை அகற்றப்பட்டபோது, பத்திரிகைகளில் எப்படி செய்தி வந்தது என்றால், யாரோ ஒருவன் லாரியில் வந்து நேராக சிலையை இடித்து விட்டான் என்றுதான் சொல்லப்பட்டது. நாங்கள் கூட கேட்டோம், சாலை தடுப்பு இருக்கிறது, இதையும் மீறி எப்படி என்று கேட்டோம். எப்படியோ, சிலை அகற்றப்பட்டது உண்மை. அதை அப்படியே விட்டு விடுங்கள். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Tags : Kannaki , Who removed the Kannaki idol? Heated debate in the Assembly
× RELATED கண்ணகி கதையைக் கூறும் ஆற்றுக்கால் தேவி கோயில் சிற்பங்கள்