ஆரல்வாய்மொழியில் துணிகரம் மாஜி ராணுவ வீரர் வீட்டில் காரை திருடி சென்ற கும்பல் : பூஜை அறை பூட்டை உடைத்து சாவி கொத்தையும் தூக்கி சென்றனர்

ஆரல்வாய்மொழி: ஆரல்வாய்மொழியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் புகுந்த ெகாள்ளையர்கள் பூஜை அறையில் இருந்த கார் சாவியை எடுத்து, வீட்டின் முன் நின்ற காரையும் திருடி சென்றனர். குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி நடராஜன் நகர் பகுதியை சேர்ந்தவர் அழகப்பன் பிள்ளை (73). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருக்கு அழகம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் மகன் திருமணமாகி ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் உள்ளார். மகள் சென்னையில் உள்ளார். இந்நிலையில் அழகப்பன் பிள்ளையும் அவருடைய மனைவி அழகம்மாளும் சென்னையில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு நேற்று மாலை புறப்பட்டு சென்றனர்.

இவருக்கு சொந்தமான கார் வீட்டின் காம்பவுண்ட் வளாகத்துக்குள் நின்றது. கார் சாவி மற்றும் வீட்டின் பீரோக்கள் சாவி, மாடி அறை சாவி உள்ளிட்ட சாவிகள் அனைத்தையும் வீட்டின் பூஜை அறையில் ஒரு கிண்ணத்தில் வைத்து விட்டு சென்றார். முன் பக்க சாவியை மட்டும், அழகப்பன் பிள்ளை கொண்டு சென்றார்.

இந்த நிலையில், இன்று காலை அழகம்மாளின் சகோதரர் ஆறுமுகம் பிள்ளை தற்செயலாக வீட்டின் அருகே வரும் போது வீட்டின் காம்பவுண்ட் கேட் திறந்து இருந்தது. காரையும் காண வில்லை. உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

வீட்டுக்குள் இருந்த அலமாரி, பீரோக்கள் திறக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் பிள்ளை உடனடியாக இது குறித்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அழகப்பன்பிள்ளைக்கும் போனில் தகவல் தெரிவிக்கப்பட்டது. வீட்டில் இருந்து பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதா? என்பது பற்றி இன்னும் உறுதியாக தெரிய வில்லை. கார் மட்டும் தற்போது திருடப்பட்டு உள்ளது. வீட்டில் பெரிய அளவில் பணம், நகைகள் இல்லாததால் காரை கொள்ளையர்கள் திருடி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய் ஏஞ்சல் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

நேற்று மாலை சென்னைக்கு புறப்பட்டு சென்ற அழகப்பன் பிள்ளை மற்றும் அவருடைய மனைவி அழகம்மாள் ஆகியோர் தோவாளை கமல்நகரில் உள்ள அழகம்மாள் சகோதரர் ஆறுமுகம் பிள்ளையிடம் இவர்களுடைய முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களை ஒப்படைத்து சென்றதால் முக்கிய பொருட்கள் மற்றும் ஆவணங்கள் தப்பியதாக கூறப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் சமீப காலமாக ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு திருட்டு கும்பல் கைவரிசை காட்டி வருகிறது. இரணியல் அருகே காரங்காடு அடுத்த நுள்ளிவிளையை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி சோபி (47), கடந்த இரு நாட்களுக்கு முன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். பின்னர் திரும்பி வந்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 பவுன் தங்க வளையல், 31 கிராம் எடை கொண்ட இரண்டு நெக்லஸ், 2 பவுன் எடையில் 4 ஜோடி கம்மல், 2 கிராம் செயின் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்று இருந்தனர். இது போல் இரணியல் அருகே குருந்தன்கோடு பொட்டல்குளம் பகுதியை சேர்ந்த டெல்பின் மேரி என்பவர், குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால் வீட்டை பூட்டி விட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று விட்டார்.

திரும்பி வந்த போது வீட்டில் பீரோவை உடைத்து மர்ம நபர்கள் தங்க நகைகளை திருடி சென்றிருந்தனர். இந்த சம்பவங்கள் ெதாடர்பாக இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதே போல் ஏற்கனவே நித்திரவிளை, களியக்காவிளை பகுதிகளிலும் ஆள் இல்லாத வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த நிலையில் தற்போது, ஆரல்வாய்மொழியிலும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

Related Stories: