×

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதால் பாக்.கில் இம்ரான்கான் ஆட்சி தப்புமா? வரும் 25ம் தேதி விவாதம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான்கான் ஆட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதால் அவரது ஆட்சி தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி வரும் 25ம் தேதி விவாதம் நடத்தப்படும் என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் விலை உயர்வு உள்ளிட்ட பல பிரச்னைகளை எழுப்பி பிரதமர் இம்ரான்கானை எதிர்க்கட்சி எம்பிக்கள் 100 பேர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், அந்த 100 எம்பிக்களும் கடந்த 8ம் தேதி பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான்கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை அளித்துள்ளனர்.

மேலும் 14 நாட்களுக்குள் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்றும், அப்படி கூட்டாவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்துவோம்’ என்றும் மிரட்டியுள்ளன. இம்ரான்கானின் சொந்த கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியை சேர்ந்த 24 எம்பிக்களும் அவருக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர். இதனால் கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இம்ரான்கானுக்கு அரசியல் நெருக்கடி முற்றியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் பாராளுமன்ற சபாநாயகர் அசாத் கைசர் வெளியிட்ட அறிவிப்பில், வரும் 25ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு பாகிஸ்தான் பாராளுமன்றம் கூடும் என்றும், அப்போது கீழ்சபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெறும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் முறைப்படி எடுத்து கொள்ளப்பட்டதும்,  அதன் மீதான வாக்கெடுப்பு 3 முதல் 7 நாட்களுக்குள் நடத்தப்பட வேண்டும் என்பதால் வருகிற 28ம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்ரான்கானை பிரதமர் பதவியில் இருந்து நீக்க அந்நாட்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு 172 வாக்குகள் தேவைப்படுகிறது. தற்போது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் 160 எம்.பி.க்கள் ஆதரவு  எதிரிக்கட்சிகளுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கூடுதல் எம்பிக்களை இழுக்க குதிரை பேரத்தில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருவதாக இம்ரான்கான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

Tags : Gil Imrancon , Is Imran Khan's regime in Pakistan wrong because of the no - confidence motion? Debate on the 25th
× RELATED கூகுள் நிறுவனத்தின் சார்பில்...