×

ஆலங்காயம் ஒன்றியத்தில் சிறப்பாக பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள்-மேலாண்மைக்குழு கூட்டத்தில் பெற்றோர் பாராட்டு

ஆலங்காயம் : ஆலங்காயம் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் சிறப்பாக பாடம் நடத்துவதாக பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளின் முன்னேற்றம் மற்றும் அதன் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படியும் பள்ளி மேலாண்மைக்குழு உருவாக்கப்பட்டது. அரசு வழிகாட்டுதலின்படி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் வளர்ச்சியில் இக்குழு முக்கிய பங்காற்றுகிறது.

மேலும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவின்படி, பள்ளி மேலாண்மைக்குழு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுகட்டமைப்பு செய்வது அவசியமாகும். மேலாண்மை குழுவின் செயல்பாடுகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்பு ஆகியன குறித்த விழிப்புணர்வு கூட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் நேற்று நடைபெற்றது.
அதன்படி, திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு பள்ளிகளிலும் நேற்று பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் விழிப்புணர்வு கூட்டமானது பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் நடைபெற்றது.

அதன்படி, நிம்மியம்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வள்ளிப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் ஆலங்காயம் வட்டார கல்வி அலுவலர் சித்ரா கலந்து கொண்டு, பெற்றோர்களுக்கு மேலாண்மை குழு, மாணவர்கள் மற்றும் பள்ளியின் தரத்தை உயர்த்துவது ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
அப்போது, கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் தேவைகள் குறித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

அதில், பெரும்பாலானோர் ஸ்மார்ட் கிளாஸ் வசதி, கழிவறை வசதி, விளையாட்டு, திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம், ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தனர். சிலர் அரசு பள்ளி சிறப்பாக செயல்படுவதாகவும் ஆசிரியர்கள் அனைவரும் சிறந்த முறையில் மாணவர்களுக்கு பாடம் கற்று கொடுப்பதாகவும் கூறி ஆசிரியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

Tags : Alangayam Union , Alangayam: Parents at the school management committee meeting said that teachers in government schools in Alangayam Union are conducting better lessons
× RELATED ஆலங்காயம் ஒன்றிய மலை கிராமங்களுக்கான...