தூத்துக்குடியில் பனை மரம் ஏறும் கருவி செயல்விளக்க முகாம்-கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு

தூத்துக்குடி : தூத்துக்குடியில் பனை மரம் ஏறும் கருவி செயல் விளக்க முகாமை கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் எளிதாக பனை மரம் ஏறும் வகையில் புதிய கருவி வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த கருவியின் செயல்பாடு குறித்த செயல் விளக்க முகாம் தூத்துக்குடி அருகே அந்தோனியார்புரத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு  கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். இதில்  கனிமொழி எம்பி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர்  பனையேறும் கருவி செயல்படும் விதத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து அட்மா திட்டத்தின் கீழ் மானிய விலையில் பனை மரம் ஏறும் கருவியை பயனாளிகளுக்கு வழங்கினார். இதைத்தொடர்ந்து  கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘பனைத் தொழிலை பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதிய பனைகள் வளர்ப்பு, பனைகளை பாதுகாப்பது முக்கியமாக கூறப்பட்டு உள்ளது. தற்போதைய சூழலில், இதிலுள்ள ஆபத்தை நினைத்து பல இளைஞர்கள் இந்த தொழிலுக்கு வருவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் கருப்பட்டி உள்ளிட்ட பனை பொருட்கள் தயாரிப்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. தென்னை மரம் ஏறுவதற்காக ஒரு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அந்த இயந்திரத்தில் மாற்றம் செய்து புதிய இயந்திரம் உருவாக்கப்பட்டு உள்ளது. பனை தொழிலை பாதுகாப்பாக செய்வதற்கும் இந்த இயந்திரம் உருவாக்கப்பட்டு உள்ளது’’ என்றார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக மாணவர் அணி மாநில துணை அமைப்பாளர் உமரிசங்கர், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், ஒன்றியச் செயலாளர்கள் ஜெயக்கொடி,  சுப்பிரமணியன், இசக்கிபாண்டியன், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராமஜெயம், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் ஆஸ்கர், மாவட்டப் பிரதிநிதிகள் ராஜநாகராஜன், தொண்டர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஆறுமுகம்,  தூத்துக்குடி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் முகைதீன், துணை இயக்குநர் (மாநில திட்டம்) பழனிவேலாயுதம், துணை இயக்குநர் ஜெயசெல்வின் இன்பராஜ், தூத்துக்குடி வட்டார வேளாண் உதவி இயக்குநர் சகாயமேரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: