×

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி மீண்டும் வெற்றி: நாசர் தலைவர், கார்த்தி பொருளாளர்

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி மீண்டும் வெற்றிபெற்றுள்ளது. நாசர் தலைவராகவும், கார்த்தி பொருளாளராகவும் தேர்வு பெற்றுள்ளனர். நாசர் 2வது முறையாக தலைவர் ஆகிறார். தென்னிந்திய  நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019 ஜூன் 23ம் தேதி தேர்தல்  நடந்தது. ஆனால், ஐகோர்ட் உத்தரவுப்படி வாக்கு எண்ணிக்கை நடத்தாமல்,  வங்கி லாக்கரில் வாக்கு பெட்டிகள் பத்திரமாக வைக்கப்பட்டன. இதற்கிடையே  நடிகர் சங்க தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரித்த ஐகோர்ட்  நீதிபதி கல்யாணசுந்தரம், தேர்தல் செல்லாது என்று தீர்ப்பு அளித்தார்.

இதையடுத்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து நடிகர் ஏழுமலை என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த  மனுவை நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அந்த  விசாரணையில், நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019ல் நடந்த  தேர்தல் செல்லும் என்ற சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக ஏழுமலை  தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.  மேலும், நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண தடையில்லை என்றும்  உத்தரவிட்டனர். இந்நிலையில், நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் இப்பணி நடந்தது. நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டன.  தலைவர், 2 துணை தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 29 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் போட்டியிட்டனர். மற்றொரு தரப்பில் தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரசாந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.

நேற்று மாலை வாக்கு எண்ணிக்கை முடிந்தது. பிறகு வெற்றிபெற்றவர்கள் குறித்த முடிவுகள் வெளியானது. பாண்டவர் அணியை சேர்ந்த நாசர் தலைவராகவும் (1,701), விஷால் பொதுச்செயலாளராகவும் (1,720), கார்த்தி பொருளாளராகவும் (1,827) தேர்வு செய்யப்பட்டனர். துணை தலைவர்களாக பூச்சி முருகன் (1,612), கருணாஸ் (1,605) ஆகியோர் தேர்வு பெற்றனர்.

கே.பாக்யராஜ் அணியை சேர்ந்த யாரும் வெற்றிபெறவில்லை. செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்படுகின்றன. புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோருக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரைத்துறை சம்பந்தப்பட்ட பல சங்கங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளன.



Tags : Vishal ,South Indian ,Actors' Union ,Nasser ,Karthi , Vishal team wins South Indian Actors' Union election again: Nasser leader, Karthi treasurer
× RELATED சொல்லிட்டாங்க…