×

சமாஜ்வாடி கூட்டணியை உடைக்க முயற்சி உபி.யில் பாஜ ஆட்டம் ஆரம்பம்: அமித்ஷாவுடன் ராஜ்பர் ரகசிய சந்திப்பு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் தேர்தல் முடிந்த 10 நாட்களுக்குள், சமாஜ்வாடி கூட்டணியை உடைக்கும் முயற்சியில் பாஜ இறங்கியுள்ளது. சமாஜ்வாடியின் முக்கிய கூட்டணி கட்சிகளில் ஒன்றான சுகல்தேவ் பாரதிய சமாஜ்  கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி பரபரப்பை  ஏற்படுத்தியது. உத்தரப் பிரதேசத்தில் 2017 சட்டப்பேரவை தேர்தலில் பாஜ.வின் கூட்டணியில் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி அங்கம் வகித்தது. இக்கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர், பாஜ அமைச்சரவையிலும் இடம் பெற்று இருந்தார்.

கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக, இந்த  கூட்டணியில் இருந்து சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி  வெளியேறியது. மேலும், உபி.யில் சமீபத்தில் நடந்த சட்டபேரவை  தேர்தலில்  சமாஜ்வாடி கட்சியுடன் இக்கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில், 111 இடங்களை வென்ற சமாஜ்வாடி கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை.  சுகல்தேவ் பாரதிய சமாஜ்  6 இடங்களில் வெற்றி பெற்றது. சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்ததால், ஓம் பிரகாஷ் ராஜ்பர் மீண்டும் பாஜ பக்கம் தாவக்கூடும் என்று முன்பே தகவல் வெளியானது.

இந்நிலையில், தேர்தல் முடிவு வெளியான 10 நாட்களில் சமாஜ்வாடி கூட்டணியை உடைப்பதற்கான ஆட்டத்தில் பாஜ இறங்கி விட்டது. இதன் முதல்கட்டமாக, நேற்று முன்தினம் நடந்தஹோலி பண்டிகையின் போது, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஓம் பிரகாஷ் ராஜ்பர் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  இது தொடர்பான ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானதால் மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், சமாஜ்வாடி கூட்டணியில் இருந்து விலக போவது இல்லை என்று ராஜ்பர் தெரிவித்துள்ளார். இது குறித்து சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளர் அருண் ராஜ்பர் கூறுகையில், ‘‘பாஜ.வுடன் மீண்டும் சேருவது என்ற பேச்சுக்கே இடமில்லை. சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது பழைய புகைப்படம்,’’ என்றார்.

மணிப்பூர் முதல்வராக பைரன் சிங் தேர்வு: n உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க பாஜ எம்எல்ஏ.க்கள் கூட்டம் இன்று டேராடூனில் நடக்கிறது. ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடக்கும் இதில், புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
* கோவாவில் பாஜ.வின் புதிய முதல்வர் பதவியேற்பு விழா வரும் 23ம் தேதி அல்லது 25ம் தேதியில் நடக்கும் என்றும், இதில் பிரதமர் மோடி பங்கேற்பார் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
* மணிப்பூர் மாநிலம், இம்பாலில் நடைபெற்ற நேற்று நடைபெற்ற பாஜ சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் முதல்வராக பைரன் சிங் 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.

மோடி இல்லத்தில் ஆலோசனை: உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் பாஜ மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அங்கு முதல்வர்கள், அமைச்சர்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கையில் பாஜ மூத்த தலைவர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை தனது இல்லத்தில் இது தொடர்பாக பிரதமர் மோடி அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
* வரும்  25ம் தேதி லக்னோவில் உள்ள வாஜ்பாய் மைதானத்தில் நடக்கும் விழாவில், யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்பார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உபி பாஜ எம்எல்ஏ.க்களின் கூட்டம் வரும் 24ம் தேதி லக்னோவில் நடைபெறும் என்றும், இதில் கட்சியின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக  யோகி ஆதித்யநாத் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் என்றும் பாஜ மூத்த தலைவர் ஒருவர் நேற்று கூறினார். ஆனால், பாஜ எம்எல்ஏ.க்கள் கூட்டம் நடக்கும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று மாநில பாஜ மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

Tags : Samajwadi Alliance ,UP ,Rajbar ,Amit Shah , Attempt to break Samajwadi Party BJP game begins in UP: Rajpers secret meeting with Amit Shah
× RELATED பஞ்சுப் போர்வை போல காணப்படும்...