×

பெருஞ்சாணி அணை மூடல்

குலசேகரம்: பாசனத்திற்காக தண்ணீர் தேவை குறைந்த நிலையில் பெருஞ்சாணி அணை நேற்று மாலையில் மூடப்பட்டது. குமரி மாவட்டத்தில் பாசனத்திற்காக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வந்தது. மழைக்காலத்தில் குற்றியாணி பகுதியில் கால்வாய் உடைப்பு காரணமாக பெருஞ்சாணியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்ததால் நீர்மட்டம் சரிந்து வந்தது. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்து குறைவாக காணப்பட்டது.

மார்ச் 31 வரை பாசனத்திற்காக தண்ணீர் விநியோகம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது. பூதப்பாண்டி 6 மி.மீ, சிற்றார்-1ல் 14, பேச்சிப்பாறையில் 12.4, சிற்றார்-2ல் 13.4, பாலமோரில் 14.4, முக்கடலில் 2.6 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 38.57 அடியாக இருந்தது. அணைக்கு 357 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது.

688 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 15.80 அடியாக இருந்தது. அணைக்கு 79 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 125 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. தொடர்ந்து மாலையில் அணை மூடப்பட்டது. சிற்றார்-1ல் 9.35 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. 170 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சிற்றார்-2ல் 9.45 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. பொய்கையில் 22.60 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 2.79 அடியும் நீர்மட்டம் காணப்பட்டது. அணை மூடப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 16.80 அடியாகும். அணையில் இருந்து வினாடிக்கு 8.6 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

Tags : Perunchani Dam , Closure of Perunchani Dam
× RELATED தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் குமரி சிற்றாறில் 4 செ.மீ. மழைப்பதிவு..!!