×

பேரவையில் பட்ஜெட்டின்போது அதிமுகவினர் அமளி, வெளிநடப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2022-23ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று காலை 10 மணி அளவில் தாக்கல் செய்து பேசினார். அவர் தனது பட்ஜெட் உரையை படிக்க ஆரம்பித்ததும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து, ஒரு விஷயம் குறித்து பேச முற்பட்டார். அதற்கு சபாநாயகர் அப்பாவு, ‘நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது அது தவிர வேறு எதுவும் பேசக் கூடாது. அமருங்கள் இப்படி பேசுவது முறையல்ல’ என்று கூறினார்.

இருந்த போதிலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தனது பேச்சை தொடர்ந்து பேச ஆரம்பித்தார். அவருக்கு ஆதரவாக அதிமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பியவாறு இருந்தனர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. ஆனாலும், நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தனது பட்ஜெட் உரையை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருந்ததால், சபாநாயகர் அப்பாவு, பேச ஆரம்பித்தார்.

அப்போது கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால், நிதி அமைச்சரும் தனது பேச்சை நிறுத்தினார். இதை சபாநாயகர் கண்டித்தார். இதைத்தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். அப்போது சபாநாயகர் அப்பாவு பேசுகையில், ‘எதிர்க்கட்சியினர் பேசிய எதுவும் அவைக் குறிப்பில் இடம்பெறாது’ என்றார். அதை தொடர்ந்து நிதி அமைச்சர் தனது வரவு செலவு திட்டத்தை படிக்க ஆரம்பித்தார்.

கொரோனாவால் நிதிச்சுமை
தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுக ஆட்சி காலத்தில் பெரும்பாலும் மூலதன செலவுக்காக செலவு செய்தோம். 2022-23ம் ஆண்டு 1.20 லட்சம் கோடி கடன் பெறுவதாக அறிவித்துள்ளார்கள். நாங்கள் 10 ஆண்டுகாலமாக ரூ.4.8 லட்சம் கோடி தான் கடன் பெற்றோம்.

அப்போது, கொரோனா பரவல் காரணமாக வரவு குறைந்தது. அப்போது கடுமையான நிதிச்சுமை இருந்தது. தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. எனினும் கல்விக்கடன் வழங்கப்படவில்லை, மகளிருக்கு உரிமைத்தொகையை வழங்கவில்லை. பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. இவ்வாறு கூறினார்.

Tags : Budget, AIADMK, walkout in the Assembly
× RELATED மும்பை வடமேற்கு தொகுதியில் EVM-ல்...