×

ரஷ்யா போரை நிறுத்த வேண்டும்: புதினுக்கு, அர்னால்ட் வேண்டுகோள்

வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக ஹாலிவுட் மூத்த நடிகர், அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் குரல் கொடுத்துள்ளார். உக்ரைன் மீது தொடுத்துள்ள போரை நிறுத்த வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளதாவது: எனது அன்பான ரஷ்ய நண்பர்கள் மற்றும் உக்ரைனில் பணியாற்றும் ரஷ்ய வீரர்களுக்கு சென்றடையும் வகையில் இந்த செய்தியை அனுப்புகிறேன். உலகில் நடக்கும் விஷயங்கள் உங்களிடம் இருந்து மறைக்கப்பட்டவை.

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயங்கரமான விஷயங்கள் இருப்பதால், நான் உங்களிடம் பேசுகிறேன். உக்ரைனில் நடக்கும் போரை பற்றிய உண்மையை உங்களுக்கு சொல்கிறேன். ரஷ்யா படையெடுப்பு 141 நாடுகளால் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல கட்டிடங்கள் (மகப்பேறு மருத்துவமனை போன்றவை) குண்டுவீசி தாக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் இறந்துள்ளனர். ரஷ்யாவின் நடவடிக்கைகளால் உலகமே ரஷ்யாவுக்கு எதிராக திரும்பியுள்ளது. அப்பாவி பொதுமக்கள் மீது ரஷ்யா குண்டு மழை பொழிவது, உலகை சீற்றம் அடைய செய்துள்ளது. உலக பொருளாதாரத் தடைகள் உங்கள் நாட்டின் மீது சுமத்தப்பட்டுள்ளன. இது உங்கள் தாத்தா அல்லது உங்கள் பெரியப்பா போராடியது போல ரஷியாவை காப்பதற்கான போர் அல்ல.

இது சட்டவிரோதமான போர். இந்த ஒளிபரப்பை கேட்கும் ரஷ்ய வீரர்களுக்கு, நான் பேசும் உண்மை தெரியும். நீங்கள் அதை உங்கள் கண்களில் பார்த்திருக்கிறீர்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதனிடையே, உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் நடிகை ஒக்ஸானா ஷ்வெட்ஸ் உயிரிழந்தார். 67 வயதான அவர் குடியிருந்த கட்டிடம் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்தியது. நாடகம் மற்றும் திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை ஒக்ஸானா உயிரிழந்ததை யங் தியேட்டர் நிறுவனம் உறுதி செய்துள்ளது. அவரது மரணம் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு, தாங்க முடியாத துயரம் என்று சக நடிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Russia ,Arnold ,Putin , Russia must stop war: Arnold appeals to Putin
× RELATED மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலம் மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் நாளை பதவியேற்பு