×

பென்னாத்தூர் அடுத்த கேசவபுரத்தில் காளை விடும் திருவிழா

அணைக்கட்டு : வேலூர் தாலுகா, பென்னாத்தூர் அடுத்த கேசவபுரம் (கொட்டாமோடு) கிராமத்தில், பொன்னியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 39ம் ஆண்டு காளை விடும் விழா நேற்று நடந்தது.பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் கருணாகரன், அண்ணாதுரை, ஊர் நாட்டமைகள் கணேசன், வேல்முருகன், ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். முன்னதாக, தாசில்தார் தலைமையில் ஆர்ஐ உலகநாதன், விஏஓ லட்சுமிகாந்தம் மற்றும் வருவாய் துறையினர், விழாக்குழுவினர் உறுதிமொழி எடுத்து கொண்டனர். தொடர்ந்து, விழாவை தாசில்தார் தொடங்கி வைத்தார்.

வேலூர், ஊசூர், பென்னாத்தூர், காட்பாடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 350 காளைகள் பங்கேற்றன. மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் வீதியில் அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உற்சாகத்துடன் விரட்டினர். மதியம் 2 மணியளவில் விழா முடிக்கப்பட்ட நிலையில், கூடுதல் நேரம் அனுமதிக்க வேண்டும் என காளைகளின் உரிமையாளர்கள் தாசில்தாரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், தாசில்தார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் கிராம இளைஞர்கள், காளைகளின் உரிமையாளர்கள் கோஷமிட்டதால், போலீசார் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

மேலும், விழாவில் குறைந்த வினாடிகளில் இலக்கை நோக்கி ஓடி கடந்த காளைக்கு முதல் பரிசாக ₹70,777ம், இரண்டாம் பரிசாக ₹55,555ம், மூன்றாவது பரிசாக ₹44,444 உள்பட மொத்தம் 60 பரிசுகள் வழங்கப்பட்டது. மாடு முட்டியதில் காயமடைந்த பார்வையாளர்கள் 20 பேருக்கு கணியம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். அதில் படுகாயமடைந்த 2 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  விழாவையொட்டி டிஎஸ்பி தலைமையில் வேலூர் தாலுகா போலீசார் உள்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காளை உரிமையாளர்கள் சாலை மறியல் முயற்சி

பென்னாத்தூர் அடுத்த கேசவபுரத்தில் நடந்த காளை விடும் விழாவில் 2 மணிக்கு மேல் அனுமதி அளிக்கவில்லை. எனவே, ஏமாற்றம் அடைந்த காளைகளின் உரிமையாளர்கள் நுழைவு கட்டணத்தை திரும்ப கேட்டு, விழாக்குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், நீண்ட நேரமாகியும் வழங்காததால் ஆத்திரமடைந்த அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தாலுகா போலீசார் சமாதானப்படுத்தி பணம் திரும்ப வழங்க நடவடிக்கை எடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Kesavapuram ,Pennathur , Dam: In the village of Kesavapuram (Kottamodu) next to Pennathur in Vellore taluka, on the eve of the Ponniamman temple festival
× RELATED செங்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளி பலி