×

தென்காசியில் ரூ.1000 கோடி சிறப்பு திட்டம் நிறைவேறினால் 2050ம் ஆண்டு வரை குடிநீர் தட்டுப்பாடு இருக்காது-திமுக மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் பேச்சு

தென்காசி :  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் புதிய நிர்வாகிகள் பதவியேற்பை தொடர்ந்து தென்காசி நகராட்சியின் முதல் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டம் துவங்குவதற்கு முன்பாக இதில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாதன், தனுஷ்குமார் எம்.பி., ராஜா எம்.எல்.ஏ. வாழ்த்திப் பேசினர். இதில் சிவ பத்மநாதன் பேசுகையில் ‘‘கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் நகராட்சியில் தீட்டப்பட்ட திட்டங்களுக்கு வழங்கப்பட்ட நிதி வேறு திட்டங்களுக்கு மாற்றப்பட்டது.

இதை அமைச்சர் கே.என்.நேருவிடம் நாம் தொடர்புகொண்டு கேட்டதும் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்தார். தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு கூட்டு குடிநீர்  வழங்கும் வகையில் ரூ. ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சிறப்பு திட்டம் தயாராகி வருகிறது. அத்திட்டம் நிறைவேறினால் 2050ம் ஆண்டு வரை  குடிநீர் தட்டுப்பாடு இருக்காது. உள்ளாட்சிகளுக்குத் தேவையான நிதியை வழங்க ஒன்றிய, தமிழக அரசுகள் தயாராக உள்ளன. நகராட்சிக்கு தேவையான அனைத்து கோரிக்கைகளுக்கும் அமைச்சர்களை சந்தித்து நானும் குரல் கொடுப்பேன். உறுப்பினர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து வந்திருந்தாலும் வேற்றுமையை மறந்து நகரத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்’’ என்றார்.

  தனுஷ்குமார் எம்.பி. பேசுகையில் ‘‘உறுப்பினர்கள் முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை நடத்தாத காரணத்தால் பல கோடி ரூபாய் நிதி ஒன்றிய அரசிடம் இருந்து வரவில்லை. தற்போது தேர்தல் முடிவடைந்து உள்ளதால் நிதி கிடைக்கும். பாராளுமன்ற உறுப்பினருக்கு ரூ.5 கோடியும், சட்டமன்ற உறுப்பினருக்கும் ரூ.3 கோடியும், தொகுதி வளர்ச்சி நிதியாக வழங்கப்படுகிறது. இவற்றைக் கொண்டுதான் 2000 கிராமங்கள், 8 நகராட்சிகள், 25 பேரூராட்சிகளுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டி உள்ளது. நகராட்சியில் போதுமான நிதி ஆதாரம் இருந்தால் நீங்களே திட்டத்தைத் தீட்டி அதற்கான கடன்களை பெற்றுக்கொள்வதற்கான அதிகாரம் உள்ளாட்சி அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. சாதிர் திறமையாக செயல்பட கூடியவர்.  மாவட்டத் தலைநகராக அறிவிக்கப்பட்டாலும் தென்காசியில் போதுமான வசதிகள் இல்லை. தலைநகரில் அதிகமான வசதிகள் வந்தால்தான் மாவட்டம் வளர்ச்சி பெறும்’’ என்றார்.

  இதைத்தொடர்ந்து ராஜா எம்எல்ஏ பேசுகையில் ‘‘ஒவ்வொரு உறுப்பினரும் என்னென்ன திட்டங்கள் உள்ளன? விவசாயிகள், நெசவாளர்கள், கூலி தொழிலாளர்களுக்கான அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள், அதிகாரிகளின் பணிகள், நமது பகுதிக்கு தேவையான திட்டங்களை கேட்டுப்பெற அதிகாரிகளை எப்படி அணுகுவது? உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தெரிந்துகொண்டு சிறப்பாகச் செயல்பட வேண்டும். நாட்டிலேயே தலைசிறந்த நகராட்சியாக தென்காசி வளர்ச்சி அடைய உங்களுடன் இணைந்து நானும் பாடுபடுவேன்’’ என்றார்.

 கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் சாதிர் பேசுகையில் ‘‘நான் எப்போதும் தென்காசி மண்ணின் மீது அக்கறை கொண்டவன். அதனால்தான் கலெக்டர் அலுவலகம் நகரத்திற்குள் அமைய குரல் கொடுத்தேன். சார்பதிவாளர் அலுவலகம் நகர் பகுதியிலேயே இயங்க குரல் கொடுத்தேன். இன்னும் நிறைய பணிகள் உள்ளன. ஆனால் போதுமான நிதி இல்லை. அவற்றை கேட்டுப்பெற வேண்டும் குடிநீர் கட்டணம்,  வரி பாக்கி உள்ளிட்ட விவரங்களை கவுன்சிலர்கள் இடம் தெரிவிக்குமாறு கூறியுள்ளேன்.

குறைகளை நேரடியாகத் தெரிவித்தால் அவற்றை சரிசெய்ய கூடுமானவரை பாடுபடுவேன். அனைத்து உறுப்பினர்களிடமும் பாகுபாடின்றி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு செயல்படுவேன். பல்வேறு வழித்தடங்கள் இருந்தாலும் செல்லும் இடம் ஒன்றுதான் அதைப்போன்று நாம் பல்வேறு கட்சிகளில் இருந்து வந்திருந்தாலும் நமது நோக்கம் வளர்ச்சி என்ற ஒன்று மட்டுமே’’ என்றார். கூட்டத்தில் அதிமுக சார்பில் உமாமகேஸ்வரன், காங்கிரஸ் சார்பில் காதர் முகைதீன், பாஜ சார்பில் சங்கரசுப்பிரமணியன், முஸ்லிம் லீக் சார்பில் அபூபக்கர், சுயேச்சைகள் சார்பில் ராசப்பா என்ற முகமது மைதீன், திமுக சார்பில் ஜெயலட்சுமி பேசினர். நகர்மன்ற துணைத்தலைவர் கே.என்.எல். சுப்பையா நன்றி கூறினார்.

Tags : Tenkasi ,DMK District ,Sivapathmanathan , Tenkasi: The first meeting of the Tenkasi Municipality was held yesterday following the inauguration of the new administrators of the urban local government elections. Meeting
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...