×

தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 2 ஆண்டுகளில் 9 அலுவலகங்களில் மட்டுமே பதிவு: ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட அதிர்ச்சி தகவல்

சென்னை: அதிமுக ஆட்சியில் கடைசி 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள 9 சார் பதிவாளர் அலுவலகங்களில் மற்றும் சுயமரியாதை திருமணங்கள் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுயமரியாதை திருமண சட்டத்தின் கீழ் காதல் ஜோடிகளுக்கு திருமண பதிவு செய்ய கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மிரட்டல் விடுத்ததே திருமண பதிவு குறைய காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சமூக நீதிக்கான கலன்களில் தமிழ்நாடு என்றைக்கும் முன்னோடி மாநிலம் என்பதற்கான ஆகச்சிறந்த சான்றுகளில் ஒன்று சுயமரியாதை திருமண சட்டம். வைதிக முறை திருமணங்களுக்கு மாற்றாக, சாதி மறுத்து காதல் திருமணம் செய்வோருக்கு பெரும் அரணாக திகழும் சுயமரியாதை திருமண முறையை 1928-ம் ஆண்டு அறிமுகம் செய்தார் தந்தை பெரியார்.

அப்போது முதல் எண்ணற்ற சுயமரியாதை திருமணங்கள் நடந்திருந்தாலும், 1967-ம் ஆண்டில் அறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்த பிறகு தான் அவற்றிற்கு சட்ட அங்கீகாரம் கிடைத்தது. தந்தை பெரியாரின் சிந்தையிலே தோன்றி அறிஞர் அண்ணாவால் சட்ட அங்கீகாரம் பெருமை கொண்ட சுயமரியாதை திருமணம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்கள் அதிர்ச்சி தருபவையாக இருக்கின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் கடைசி ஒன்றரை ஆண்டுகளில் சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களை தவிர வேறு எங்கும் சுயமரியாதை திருமண சட்டத்தின் கீழ் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவுகளே இல்லை என்ற விவரம் கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 2 ஆண்டுகளில் 9 அலுவலகங்களில் மட்டுமே சுயமரியாதை திருமணங்கள் பதிவாகியுள்ளன. அதிமுக முன்னாள் அமைச்சர்களின் மறைமுக மிரட்டலே இதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதிமுக ஆட்சி காலத்தில் சுயமரியாதை திருமணத்தை பதிவு செய்யவே இயலாத சில காதல் ஜோடிகள் ஆட்சி மாறிய பிறகு தங்களது திருமணத்தை பதிவு செய்துள்ளனர். தற்போதும் சில சார்பதிவாளர்கள் சுயமரியாதை திருமணங்களை பதிவு செய்வதற்கு சுணக்கம் காட்டுவதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றன.

இதையடுத்து சுயமரியாதை திருமணங்களை பதிவு செய்வதை எளிமையாக்க சட்டமன்றத்தில் குரல் கொடுக்க போவதாக திமுக சட்டமற்ற உறுப்பினர் எழிலன் கூறியுள்ளார். சுயமரியாதை திருமண சட்டத்தை நாடு முழுவதும் சட்டப்பூர்வமாக்க திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்று சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பதால் தமிழ்நாட்டிலும் கடந்த கால காட்சிகள் மாறி சுயமரியாதை திருமண பதிவுகள் அதிகரிக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.


Tags : Tamil Nadu , Of the 575 registrar's offices in Tamil Nadu, only 9 have been registered in the last 2 years: shocking information obtained through RTI.
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...