×

நீலகிரி மாவட்டம் கல்லட்டி மலைப்பாதையில் கார் விபத்து: படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கல்லட்டி மலைப்பாதையில் உள்ள 22-வது  கொண்டைஊசி வளைவில் 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்தனர். நீலகிரி மாவட்டம் கல்லட்டி பகுதியானது மலைப்பாதைகளாகவே அமைந்துள்ளது. இந்த மலைப்பாதைகளில் வாகனங்களை இயக்குவதற்கு போதிய அனுபவம் அவசியமான ஒன்று. இப்பகுதியில் அனுபவம் வாய்ந்த ஓட்டுனர்கள் வாகனங்களை செலுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்துகிறது. குறிப்பாக, இம்மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் கல்லட்டி மலைப்பாதையும் ஓன்று. 36 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இந்த சாலையில் கல்லட்டி பள்ளத்தாக்கு வழியாக உதகையில் இருந்து முதுமலைக்கு செல்லும் வழியும், அதேபோல் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் இம்மலைப்பகுதியை பயன்படுத்தி வருகின்றனர்.

இம்மலைப்பாதையானது மிகவும் செங்குத்தாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்காகவே மாவட்ட நிர்வாகம் கல்லட்டி மலைப்பாதையை ஒரு வழிபாதையாக மாற்றியது. உதகையில் இருந்து இம்மலைப்பாதை வழியாக கேரளா மற்றும் முதுமலைக்கு செல்வதற்கு உள்ளூர் மக்களை தவிர மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. உள்ளூர் மக்கள் மட்டும் மலைப்பாதையின் இருபுறமும் செல்ல அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் இன்று, நாமக்கல் மாவட்டம் செல்லப்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் பயிலும் 7 மாணவர்கள் உதகையிலிருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக முதுமலைக்கு சென்றுபோது, 22வது கொண்டை ஊசி வளைவில் எதிர்பாராவிதமாக கார் கட்டுப்பாடு இழந்து விபத்துக்குள்ளானது.

இதில் காரானது அருகில் இருந்த 50 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.  விபத்தினை நேரில் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக படுகாயமடைந்த புகழேந்தி, ராஜ்குமார், கவுதம், தென்னரசு, பிரவீன் குமார் உள்ளிட்ட 7 பேரை மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொதுமந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.         


Tags : Gallatti ,Neilgiri district , Nilgiris, Kallatti, hill station, car, accident, hospital
× RELATED தலைகுந்தா பகுதியில் சாலையோரத்தில் புலி நடமாட்டம்: வீடியோ வைரல்