×

அரசு மருத்துவமனைகள், கல்லூரிகளில் பால் விற்பனைக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமைச்சர் சா.மு.நாசர் அறிவுறுத்தல்

சென்னை: ஆவின் இல்லம் நந்தனத்தில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தலைமையில் கடந்த 14ம் தேதி பால்வளத்துறைக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது. கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன் வளம், மீனவர் நலத்துறை செயலாளர் தென்காசி சு.ஜவகர், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டு துறை ஆணையர் பிரகாஷ், ஆவின் மேலாண்மை இயகுநர் சுப்பையன், அனைத்து மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பொது மேலாளர்கள், அனைத்து மாவட்ட துணைப் பதிவாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பின்னர், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பேசியதாவது: அரசு பொது மருத்துவமனைகள், அரசு கல்லூரிகள் போன்ற நிறுவனங்களுக்கு பால் விற்பனை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போது சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய மூன்று ஒன்றியங்களில் மட்டுமே பால் ஊற்றும் உறுப்பினர்களுக்கு பால் வழங்கும் இடத்திலேயே ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதனை மீதமுள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களிலும் நடைமுறைபடுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு ஒப்புகை சீட்டு வழங்கப்பட வேண்டும்.

சங்க வாரியாக தனித்தனியாக பால் உற்பத்தி, கால்நடைத் தீவனம் வினியோகம், தாதுஉப்பு வினியோகம் ஆகியவற்றை நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை காலத்தே அடையும் பொருட்டு மிகவும் கவனமாக தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தினசரி பால் உற்பத்தியினை அந்தந்த விரிவாக்க அலுவலர்கள், முதுநிலை ஆய்வாளர்கள், இதர களப் பணியாளர்கள் கண்காணித்து படிப்படியாக பால் உற்பத்தி அதிகரிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து அதன் அறிக்கையை  சமர்ப்பிக்க வேண்டும். பால் உற்பத்தி அதிகமாக குறைத்து அனுப்பும் சங்கங்களை ஒருங்கிணைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தி முன்னேற்ற அறிக்கையை உடன் சமர்ப்பிக்க வேண்டும். இந்த மாதத்தில் படிப்படியாக பால் உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமான கலப்படமற்ற பாலினை மட்டுமே கொள்முதல் செய்து அனுப்ப வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையை ஒன்றிய பால் சேகரிப்பு குழு தலைவர்கள் மற்றும் விரிவாக்க அலுவலர்கள் தங்களது கடமைகளை, பொறுப்புகளை உணர்ந்து   உறுப்பினர்களுக்கான சலுகைகளை உரிய முறையில் வழங்கி, சங்க செயலாளர்களுடன் களத்தில் இறங்கி ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். கடந்த 2021ம் ஆண்டு தீபாவளி பண்டிகை நாட்டிகளில் பால் உப பொருட்கள் விற்பனையில் சுமார் ரூ.82 கோடி அளவுக்கு விற்பனை செய்து சாதனை எய்திய விவரம் முதல்வரின் பாராட்டினை பெற்றது. இதே போன்று திட்டமிடலுடன் செயல்பட்டால் மேன்மேலும் சாதனைகளை விற்பனையில் அடையலாம். 12 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆவின் பால் நுகர்வோரின் நலன் கருதி பால் விற்பனையில் கலப்படத்திற்கு இம்மியளவும் இடமளிக்காமல், நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக நுகர்வோர்களுக்கு விற்காமல் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.


Tags : Minister ,NM Nasser , Authorities should take action to sell milk in government hospitals and colleges: Minister NM Nasser instructs
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி