×

குண்டம் திருவிழாவை முன்னிட்டு பண்ணாரி அம்மன் கோயிலில் கம்பம் சாட்டுதல் கோலாகலம்

சத்தியமங்கலம்: பண்ணாரி அம்மன் திருவீதி உலா முடிந்து கோயிலை வந்தடைந்ததை தொடர்ந்து  கோலாகலமாக நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

இந்த ஆண்டு திருவிழா கடந்த 7ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பண்ணாரி அம்மன் சத்தியமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் திருவீதி உலா நடந்தது. நேற்று இரவுடன் திருவீதியுலா முடிவு பெற்று அம்மன் சப்பரம் கோயிலை வந்தடைந்தது. இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை பண்ணாரி அம்மன் கோயில் முன்பு நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, கோயிலுக்கு முன்பு குழி அமைத்து அதற்கு சிறப்பு பூஜைகள் செய்து விறகுகளால் தீயிடப்பட்டது.

இதையடுத்து பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டினர். இதைத்தொடர்ந்து குழிதோண்டி அமைக்கப்பட்ட நிலக்கம்பத்தை சுற்றிலும் மேளதாளம் முழங்க பக்தர்கள் கம்ப ஆட்டம் ஆடி மகிழ்ந்தனர். விழாவில், பங்கேற்ற பெண் பக்தர்களும் கம்பம் ஆட்டம் ஆடினர். பண்ணாரி அம்மன் கோயிலில் விடிய விடிய நடந்த இந்நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று முதல் தினமும் இரவு கோயில் முன்பு நிலக்கம்பத்தை சுற்றிலும் மலை கிராம மக்களின் மீனாட்சி வாத்தியம் மற்றும் மேளதாளம் முழங்க பக்தர்களின் கம்ப ஆட்டம் நடைபெறும். வரும் 21 மற்றும் 22ம் தேதிகளில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Tags : Kandam festival ,Bantari Amman Temple , Pole hoisting at the Pannari Amman Temple on the eve of the Gundam Festival
× RELATED பண்ணாரி அம்மன் கோயிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம்