×

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசை கண்டித்து ஒகேனக்கல்லில் 24ம் தேதி வாகன பேரணி, ஆர்ப்பாட்டம்: தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

தர்மபுரி: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசை கண்டித்து, வரும் 24ம் தேதி தர்மபுரி முதல் ஒகேனக்கல் வரை வாகன பேரணியும், தொடர்ந்து ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும் என தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி தெரிவித்துள்ளார். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின்பு, மாநில தலைவர் பேராசிரியர் சின்னசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு பெயரில் நெல் உற்பத்தியில் சாதனை புரியும் விவசாயிகளுக்கு விருது வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ள முதல்வருக்கு நன்றி. காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு விரோதமாக, தமிழகத்தின் தண்ணீர் உரிமையை பறிக்கும் வகையில், கர்நாடக அரசும், எதிர்க்கட்சியும் இணைந்து தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீரை விட கூடாது என்ற நோக்கத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கதாகும்.

அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி தரக்கூடாது. தேசிய ஒருமைப்பாட்டிற்கு கேடு விளைவிக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வரும் 24ம் தேதி தர்மபுரியில் இருந்து ஒகேனக்கல் வரை வாகன பேரணியும், தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரள்வார்கள். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் எண்ணெகோல் புதூர், தும்பலஅள்ளி கால்வாய் திட்டம், ஆழியாலம் தூள்செட்டி ஏரி கால்வாய் திட்டம்,  புலிகரை ஏரி கால்வாய் திட்டம் ஆகியவற்றை தாமதமின்றி அரசு நிறைவேற்ற  வேண்டும். காவிரி உபரிநீரை ஒகேனக்கல்லில் இருந்து மின்மோட்டார் மூலம், தர்மபுரி மாவட்ட ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளின் அனைத்து வகையான விவசாய கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tamil Farmers Association ,Ochenakal ,Karnataka Government ,Meghadadu , Megha Daduvil Dam, Government of Karnataka, Vehicle rally
× RELATED காவிரியில் 2.5 டி.எம்.சி தண்ணீர் திறக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு பரிந்துரை