×

கெலமங்கலம் அருகே ஊருக்குள் புகுந்த யானை கூட்டம்-கிராம மக்களை விரட்டியதால் பரபரப்பு

தேன்கனிக்கோட்டை : கெலமங்கலம் அருகே வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 8 யானைகள் காலை நேரத்தில் கிராமத்திற்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தியது. அப்போது, வனத்துறையினர் விரட்டியபோது, பள்ளிக்கு அருகில் சாலையை கடந்து சென்றது.கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே ஊடதுர்க்கம் வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 8 யானைகள் நேற்று காலை 7 மணியளவில் போடிசிப்பள்ளி கிராமத்திற்கு வந்தது.

பின்னர் அங்குள்ள விளை நிலங்களுக்குள் புகுந்த யானை கூட்டம் பயிர்களை நாசம் செய்தன. இதனை பார்த்த கிராம மக்கள் யானைகளை விரட்ட முயன்றனர். அப்போது யானைகள் கிராம மக்களை துரத்தியதால், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து அந்த பகுதியில் சுற்றித்திரிந்த 8 யானைகளையும் விரட்டினர். அப்போது யானைகள் கூட்டம் போடிசிப்பள்ளி அருகேயுள்ள அரசு மாதிரிப்பள்ளி, அதன் அருகேயுள்ள பாலிடெக்னிக் கல்லூரி அருகே சாலையை கடந்து சென்றன. இதனால், பரபரப்பு ஏற்பட்டது. 8 யானைகளையும் வனத்துறையினர் வனப்பகுதிக்கு விரட்டியடித்து, தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஊடேதுர்க்கம் காப்புக்காட்டில் முகாமிட்டிருந்த யானைகளை ஓசூர் வனச்சரகர் ரவி தலைமையிலான வனத்துறையினர் நேற்று முன்தினம் மாலை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். போடிச்சிப்பள்ளி அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே சாலையை கடந்த யானைகள் ஜெக்கேரி, லட்சுமிபுரம் வழியாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்தன. இந்நிலையில் லக்கசந்திரம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்த யானைகள் ஒரு ஏக்கரில பீன்ஸ், ஒரு ஏக்கரில் கோஸ் மற்றும் மாஞ்செடிகளையும் துவம்சம் செய்தன. இதையடுத்து, ேதன்கனிக்கோட்டை வன காப்பாளர் பிரசாந்த் நேரில் சென்று, சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு பெற்றுத்தருவதாக விவசாயிகளிடம் உறுதியளித்தார்.

9 யானைகள் முகாம்:  கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழகத்தின் எல்லைப்பகுதியாகும். வனப்பகுதிகள் நிறைந்த இப்பகுதிக்கு கர்நாடக, ஆந்திர வனப்பகுதிகளிலிருந்து வெளியேறிய யானைக்கூட்டம் அதிகாலை நேரத்தில் வந்து முகாமிடுவதும், அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து நாசம் செய்து விட்டு, பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் செல்வதுமாக உள்ளன. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தகவலின்பேரில், அப்பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இப்பகுதியில் 9 யானைகள் சுற்றி வருகின்றன. அவற்றை ஊருக்குள் நுழைய விடாமல் வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். தொடர்ந்து யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம் என்றனர்.

Tags : Nuru ,Kelamangalam , Dhenkanikottai: 8 elephants camped in the forest near Kelamangalam entered the village in the morning and cleared the fields.
× RELATED பயிரில் மகசூல் அதிகரிக்க பசுந்தாள் உரமிட வேண்டும்