×

பங்குனி உத்திர திருவிழா எதிரொலி: மேலப்பாளையம் சந்தையில் அலைமோதிய கூட்டம்

நெல்லை: தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற பங்குனி உத்திரம் திருவிழாவையொட்டி மேலப்பாளையம் கால்நடை சந்தையில் இன்று காலை கூட்டம் அலைமோதியது. ஆடுகள், சேவல்கள், கோழிகளை பக்தர்கள் பேரம் பேசி வாங்கி சென்றனர். குலதெய்வ வழிபாட்டின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர திருவிழா வரும் 18ம்தேதி தென்மாவட்டங்களில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் குல தெய்வத்தை வழிபடுவதற்கு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு பக்தர்கள் திரண்டு செல்வது வழக்கம்.

மேலும் அத்திருவிழாவில் பக்தர்கள் கிடா வெட்டி வழிபாடு நடத்துவதும் வழக்கம். இதையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்ட சந்தைகளில் தற்போது ஆட்டு கிடாக்களின் விற்பனை களைக்கட்டியது. தென்மாவட்டங்களிலுள்ள சந்தைகளில் பிரசித்தி பெற்ற மேலப்பாளையம் கால்நடை சந்தையில் நேற்று இரவு முதலே ஆடுகள் குவிய தொடங்கின. மேலப்பாளையம் சந்தையில் இன்று காலை 6 மணி முதல் ஆடுகள், சேவல்கள், நாட்டுக் கோழிகளை விற்பதற்கவும், வாங்கவும் பொதுமக்களும், வியாபாரிகளும் குவிந்தனர். எடைக்கு ஏற்ப ஆடுகளின் விலை நிர்ணயம் செய்து, வியாபாரிகள் விற்பனையை மேற்கொண்டனர்.

10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.8 ஆயிரத்திற்கும், 35 கிலோ எடை கொண்ட ஆடுகள் ரூ.30 ஆயிரத்திற்கும் மேலும் விற்பனையானது. பங்குனி உத்திர திருவிழாவை பொறுத்தவரை கோயில்களில் நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கேற்ப கரும்போர் கிடா, செம்போர் கிடா மற்றும் கருங்கிடா, செங்கிடா என நிறங்களை கணக்கில் கொண்டு வாங்கி சென்றனர். அத்தகைய கிடாக்களுக்கு நல்ல விலையும் இருந்தது. சில கோயில் நிர்வாகிகள் சிறு லாரியை வாடகைக்கு எடுத்து வந்து 10 முதல் 12 ஆடுகளை மொத்தமாக வாங்கி சென்றனர். மேலும் ேகாழி, சேவல்களின் விற்பனையும் அதிகம் காணப்பட்டது.

வழக்கமாக ரூ.6 ஆயிரத்திற்கு விற்பனையாகி வந்த ஆடுகள் இன்று ரூ.8 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனையானது. மேலப்பாளையம் கால்நடை சந்தையில் வழக்கமான நாட்களை காட்டிலும் பொதுமக்கள் அதிகளவில் திரண்டதால் ஆடுகளையும், நாட்டு கோழிகளையும் வாங்கியவர்களை அங்கிருந்து மாநகராட்சி அதிகாரிகள் உடனுக்குடன் வெளியேற்றினர். பொதுமக்கள் குவிந்ததால் மேலப்பாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Panguni Uttara Festival ,Melappalayam market , Echo of Panguni Uttara Festival: Wave crowd at Melappalayam market
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம்...