×

முதல்வர் தலைமையில் லோக் ஆயுக்தா கூட்டம்: தலைமை செயலகத்தில் நடந்தது

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் லோக் ஆயுக்தா கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. தமிழகத்தில் லோக் ஆயுக்தா குழுவின் தலைவர் பதவிக்கு ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் மற்றும் சட்டத்துறையை சார்ந்த உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் கே.ஜெயபாலன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, நீதித்துறை அல்லாத உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.ராஜாராம், மூத்த வழக்கறிஞர் ஆறுமுகம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மேலும், தலைவர்  மற்றும் உறுப்பினர்கள் 5 ஆண்டுகள் பதவியில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அரசின் பொறுப்புடைமையும், சார்பற்ற நிலையையும் நிலைநாட்டும் பொருட்டு, பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்கும் இந்த லோக் ஆயுக்தா அமைப்பின் வரம்பிற்குள், மாநில முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள், அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், அமைப்பு, வாரியம், சங்கம், நிறுவனம்  தன்னாட்சி அமைப்பு போன்றவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகிய அனைவரும் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

குற்ற நிகழ்வு நடந்த நான்கு ஆண்டுகளுக்குள் பெறப்படும் புகார் மனுக்களை லோக் ஆயுக்தா விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும். பெறப்படும் புகார்  மனுவின் தன்மையையும் குற்றம் சுமத்தப்பட்ட பொது ஊழியரின் நிலையையும் பொறுத்து, அந்த புகாரை விசாரிக்க, தனது விசாரணை பிரிவையோ அல்லது மாநிலத்தின் வேறு ஏதாவதொரு விசாரணை அமைப்பினையோ அல்லது விழிப்புப்பணி ஆணையத்தையோ கோருவதற்கு லோக் ஆயுக்தா அமைப்பிற்கு முழு அதிகாரம் உண்டு. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று லோக் ஆயுக்தா கூட்டம் நடந்தது. இதில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 


Tags : Lok Ayukta ,Chief Minister ,General Secretariat , Lok Ayukta meeting chaired by the Chief Minister: Held at the General Secretariat
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...