×

கழற்றி விடப்படுகிறார் சாவந்த் கோவா முதல்வர் விஸ்வஜித் ரானே? ஓரிரு நாட்களில் அறிவிப்பு

பனாஜி: கோவாவின் புதிய முதல்வர் யார் என்ற சஸ்பென்று நிலவும் நிலையில், இம்மாநில முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே கவர்னரை திடீரென சந்தித்து பேசி உள்ளார். உத்தர பிரதேசம் உட்பட 5 மாநிலங்களில் நடந்த தேர்தலில், 4ல் பாஜ வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்துள்ளது. கோவாவில் உள்ள 40 தொகுதிகளுக்கு நடந்து தேர்தலில், பாஜ-20, காங்கிரஸ்-11, மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி-2, ஆம் ஆத்மி-2, மற்றவை-5 தொகுதிகளை கைப்பற்றி உள்ளன. பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவைப்படும் நிலையில், தனிப்பெரும் கட்சியாக வந்துள்ள பாஜ ஆட்சி அமைக்க, மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சியும், 3 சுயேச்சை எம்எல்ஏ.க்களும் ஆதரவு அளித்துள்ளனர்.

இம்மாநில முதல்வராக இருந்த பிரமோத் சாவந்த், சன்குலிம் தொகுதியில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றார். இதனால், இவரை மீண்டும் முதல்வராக்க பாஜ மேலிடம் விரும்பவில்லை. மேலும், சாவந்த் முதல்வராக இருந்தபோது தனது கட்சியை சேர்ந்த 2 அமைச்சர்களை நீக்கியதால், இவரை முதல்வராக்க ஆதரவு தர முடியாது என மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சியும் உறுதியாக கூறி விட்டதாக தெரிகிறது. இதனால், கோவாவின் புதிய முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸ் நிலவுகிறது. புதிய முதல்வருக்கான போட்டியில் கடந்த ஆட்சியில் துணை முதல்வராக இருந்த சந்திரகாந்த் காவ்லேகர், மாஜி சுகாதாரத் துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே, போக்குவரத்து துறை அமைச்சர் மவுவின் கோடின்ஹோ ஆகியோர் உள்ளனர். இதில், விஸ்வஜித் ரானேவுக்கு பாஜ மேலிடம் ஆதரவாக இருக்கிறது. அதற்கு ஏற்றாற்போல், ஆளுநர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளையை இவர் திடீரென சந்தித்து பேசியுள்ளார். இதனால், கோவாவில் பரபரப்பு நிலவுகிறது.

ஆளுநரை சந்தித்த பின் விஸ்வஜித் அளித்த பேட்டியில், ‘இது முற்றிலும் தனிப்பட்ட மரியாதைக்குரிய சந்திப்பு. அரசியல் எதுவும் இல்லை,’ என்றார். அப்போது, ‘சாவந்த் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்படுவாரா?’ என்ற கேள்விக்கு, ‘அது பற்றி எனக்கு தெரியாது’ என்று கூறிவிட்டு நழுவினார். புதிய முதல்வர் பற்றிய அறிவிப்பை ஓரிரு நாட்களில் பாஜ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* முதல்வரை தேர்ந்தெடுக்்க மேலிட பார்வையாளர்கள்
பாஜ வெற்றி பெற்ற 4 மாநிலங்களில். உபி.யை தவிர மற்ற 3 மாநிலங்களில் முதல்வரை தேர்ந்தெடுப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த 3 (கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர்) மாநிலங்களுக்கு விரைவில் பாஜ.வின் மேலிட பார்வையாளர்கள் வர உள்ளனர். அவர்கள் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, புதிய முதல்வர்கள் யார் என்பதை முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

* காங்கிரஸ் மவுனம்
கோவா தேர்தல் முடிவுகள் வெளியாகி மூன்று நாட்கள் ஆகியும், காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் கூட்டம் இன்னும் நடத்தப்படவில்லை. இதனால், இக்கட்சியின் சட்டப்பேரவை கட்சித் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

* கெஜ்ரிவால், பகவந்த் மான் பொற்கோயிலில் தரிசனம்
பஞ்சாப் தேர்தலில் அமோக வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக ஆம் ஆத்மி சார்பில் அமிர்தசரசில் நேற்று பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. இதில், கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான  அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். இவரும், பஞ்சாப் முதல்வராக பதவியேற்க உள்ள பகவந்த் மானும் பொற்கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். பின்னர், கெஜ்ரிவால் அளித்த பேட்டியில், ‘பஞ்சாப்புக்கு நேர்மையான முதல்வர் கிடைத்துள்ளார். அதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பகவந்த் மான் மிக மிக நேர்மையானவர்,’ என தெரிவித்தார்.

* மான் மட்டும் பதவியேற்பு அமைச்சர்கள் கிடையாது
சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த கட்கர் கலான் கிராமத்தில் 16ம் தேதி, மதியம் 12.30க்கு பஞ்சாப் முதல்வராக பகவந்த் சிங் மான் பதவியேற்கிறார். அன்றைய தினம் அவருடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்க மாட்டார்கள் என்று, ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமைச்சர்கள் யார் என்பது முடிவு செய்யப்பட்ட பிறகு, அவர்களின் பதவியேற்பு விழா தனியாக நடக்கும் என்று தெரிகிறது.


Tags : Viswajid Rane , Sawant Goa Chief Minister Viswajit Rane sacked? Notice in a couple of days
× RELATED இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய தான் பாஜ 400...