×

வேப்பூர் அருகே பரபரப்பு வாலிபர் சாவில் திடீர் திருப்பம்: கழுத்தை நெரித்து கிணற்றில் வீசி சென்றது அம்பலம்-6 பேர் அதிரடி கைது

வேப்பூர் : வேப்பூர் அடுத்த பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் மகன் அபிசுந்தர் (17). ஐடிஐ படித்த இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் சொந்த கிராமத்திற்கு வந்த இவர் அங்கேயே தங்கியிருந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 9ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற அபிசுந்தர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து அபிசுந்தர் பூலாம்பாடி கிராமத்தில் உள்ள பன்னீர்செல்வம் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தனது மகன் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது தந்தை பழனிவேல் வேப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

 இந்நிலையில் கடந்த 10ம் தேதி அபிசுந்தரின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர் அபிசுந்தர் கொலை செய்யப்பட்டுள்ளதாகக்கோரி வேப்பூரில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து கலைந்து சென்றனர். நேற்று முன்தினம் மாலை பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததையடுத்து அபிசுந்தருடன் முன்விரோதத்தில் இருந்து வந்த பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா மற்றும் அவரது உறவினர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அபிசுந்தர் கடந்த 9ம் தேதி பன்னீர்செல்வம் என்பவரது கிணற்றுக்கு சென்றுள்ளார்.

 அப்போது, அங்கு சென்ற பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் இளையராஜா(26), தங்கவேல் மகன் அண்ணாதுரை (50) தூண்டுதலின் பேரில் அவர்களது உறவினர்களான திட்டக்குடி அடுத்த நிதிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மூக்கன் மகன் பாண்டியன்(33), பாண்டியன் மனைவி மணிமேகலை (31), முருகராஜ் மகன் ராமர் (18), முருகராஜ் மனைவி பெரியம்மாள் (36) ஆகிய 6 பேரும் சேர்ந்து அபிசுந்தர் கழுத்தை நெரித்து தாடையில் குத்தித் தாக்கியுள்ளனர்.

இதில் அபிசுந்தர் மூக்கு, கழுத்து மற்றும் உதடு பகுதிகளில் காயம் ஏற்பட்டு சிறு சுயநினைவின்றி கிடந்துள்ளார். இதையடுத்து, அவரை 6 பேரும் சேர்ந்து கிணற்றில் போட்டு விட்டு சென்றதால் அபிசுந்தர் உயிரிழந்தது தெரியவந்தது.  

 இதையடுத்து வேப்பூர் போலீசார் அபிசுந்தர்  உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து அபிசுந்தர் கொலைக்கு காரணமான இளையராஜா, பாண்டியன், மணிமேகலை, ராமர், பெரியம்மாள், அண்ணாதுரை உள்ளிட்ட 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Veppur , Veppur: Abhisunder (17), son of Palanivel, hails from Poolambadi village next to Veppur. He studied ITI in a private company in Chennai
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறைகளால் ரமலான்...