உ.பி வெற்றியை உத்தரகாண்டில் ரசித்த தாய் : யோகி ஆதித்யநாத்தின் குடும்பத்தினர் மகிழ்ச்சி

டேராடூன்: உத்தரபிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியமைத்த நிலையில், யோகியின் குடும்பத்தினர் உத்தரகாண்டில் மகிழ்ச்சியடைந்தனர். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த கிராமம் உத்தரகாண்ட் மாநிலம் பஞ்சூரில் உள்ளது. அங்கு அவரது தாயார் சாவித்திரி  தேவி, மூத்த சகோதரர் மன்வேந்திரா மற்றும் இளைய சகோதரர் மகேந்திரா ஆகியோரின்  குடும்பம் உள்ளது. கோதார் கிராமத்தில் வசிக்கும் யோகி ஆதித்யநாத்தின் மூத்த சகோதரியான சஷி  பயல், அவரது கணவர் பூரண் சிங் பயலுடன் சேர்ந்து நீலகண்டன் கோயில் பகுதியில் சிறிய கடை நடத்தி வருகின்றனர்.

உத்தர பிரதேச தேர்தல் முடிவுகளை ஒட்டுமொத்த நாடும் கவனித்தது போல, யோகி ஆதித்யநாத்தின்  கிராம மக்களும் இருந்தனர். அங்கு மீண்டும் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, உத்தரகாண்ட் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். யோகியின் வெற்றியை அவரது தாய் சாவித்திரி தேவி கேட்டு மகிழ்ச்சியடைந்தார். இதற்காக டிவியில் ஒளிப்பரப்பான தேர்தல் முடிவுகளை தொடர்ந்து பார்த்து வந்தார். பின்னர் யோகி ஆதித்யநாத்தின் தாயும், சகோதரரும் அங்குள்ள கிராம மக்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதுகுறித்து யோகியின் சகோதரர் மகேந்திர பிஷ்ட் கூறுகையில், ‘உத்தர பிரதேசத்தில் பாஜக மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்த்தோம். பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் நல்லாட்சிக்கு மக்கள் மீண்டும் ஆதரவு அளித்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் மீண்டும் நல்லாட்சியை வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. அவரது வெற்றியால் உத்தரகாண்ட் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்’ என்றார்.

Related Stories: