ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் தொழிற்சாலை ஊழியர் மர்ம மரணம்: உறவினர்கள் போராட்டம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரு தனியார் தொழிற்சாலை ஊழியரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நேற்று அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூபதி (48). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர், திருவள்ளூர் மாவட்டம், செம்பரம்பாக்கம், சென்ட்ரல் சிட்டி பகுதியில் தனது குடும்பத்துடன் தங்கி, ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டை பகுதியில் ஒரு தனியார் கார் தயாரிப்பு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்த பூபதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கேயே முதலுதவி சிகிச்சை அளித்து, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்கு ஊழியர்கள் கொண்டு வந்துள்ளனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கெனவே பூபதி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு பூபதியின் சடலத்தைக் கைப்பற்றி, அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பூபதியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே நேற்று மாலை பூபதியின் மர்ம மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்து, அரசு மருத்துவமனையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பூபதியின் இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கவும், இறந்துபோன பூபதியின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு வேலைவாய்ப்பு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தினர்.  இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: