×

திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 உரக்கடைகளின் உரிமம் தற்காலிக ரத்து-விதிமுறைகளை பின்பற்றாததால் நடவடிக்கை

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் உரிய விதிமுறைகளை பின்பற்றாத 18 தனியார் உர விற்பனை நிலையங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில் நவரை பட்டத்தில் நெற்பயிர் சாகுபடி அதிகளவில் நடந்துள்ளது. இதனால் யூரியா தேவை அதிகரித்துள்ளது. ஆனால், கூட்டுறவு சங்கங்களில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தனியார் விற்பனை நிலையங்களிலும் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், சில தனியார் விற்பனை நிலையங்களில் யூரியா இருப்பு இருந்தும், அதனை வாங்க வரும் விவசாயிகளிடம் கூடுதல் இடுபொருட்கள் வாங்கினால்தான் யூரியா வழங்கப்படும் என நிர்பந்தித்து வருவதாகவும், சிலர் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் கடந்த 8ம் தேதி நடைபெற்ற தாலுகா அளவிலான குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
எனவே, அனைத்து தனியார் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் குடோன்களில் ஆய்வு மேற்கொள்ளும்படி வேளாண் துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

அதன்பேரில், நேற்று வேளாண் இணை இயக்குனர் மேற்பார்வையில் வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) என்.விஜயகுமார் தலைமையில், சிறப்பு குழு அமைத்து சில்லறை மற்றும் மொத்த விற்பனை நிலையங்கள், குடோன்களில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, பெரும்பாலான சில்லறை விற்பனை நிலையங்களில், விவசாயிகளுக்கு கூடுதல் விலைக்கு உரம் விற்பனை, இடுபொருட்கள் வாங்க கட்டாயப்படுத்தியது உள்ளிட்ட  உரக்கட்டுப்பாட்டு ஆணையை மீறி செயல்பட்டு வந்ததாக, 18 உர விற்பனை நிலையங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அந்த கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Thiruvnamalai district , Thiruvannamalai: Licenses of 18 non-compliant private fertilizer outlets in Thiruvannamalai district have been suspended.
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பரவலான மழை