×

தண்டராம்பட்டு அருகே கல்வராயன் மலை கிராமங்களில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்கருவிகள் கண்டெடுப்பு-அரசு ஆவணப்படுத்த கோரிக்கை

திருவண்ணாமலை : தண்டராம்பட்டு அருகே கல்வராயன் மலைப்பகுதி கிராமங்களில், 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகா, பீமாரப்பட்டி பகுதியில் உள்ள கல்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள கீழ்வலசை, மேல்வலசை ஆகிய மலை கிராமங்களில் பெருங்கற்கால நினைவு சின்னங்கள் மற்றும் புதிய கற்கால கருவிகள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த பழனிச்சாமி, கிராம உதவியாளர் முருகன் ஆகியோர் கிராம மக்களுடன் இணைந்து ஆய்வு செய்தனர்.

அப்போது, தொல்லியல் முக்கியத்துவம் பெற்ற சிலைகள், நடுகற்கள், சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய பலகை கற்கள், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகள் இருப்பது தெரியவந்தது.இதுகுறித்து, வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் ச.பாலமுருகன் கூறியதாவது:தென்பெண்ணை ஆற்றுக்கு வடக்கில் உள்ள மலைப்பகுதி ஜவ்வாதுமலை குன்றுகள் எனவும், தெற்கில் உள்ளவை கல்வராயன்மலை குன்றுகள் எனவும் அழைக்கப்படுகிறது. கல்வராயன்மலை தொடரில் கீழ்வலசை, மேல்வலசை, அக்கரைப்பட்டி ஆகிய 3 கிராமங்கள் மட்டும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளன.

இந்த கிராமங்களில் நடத்திய கள ஆய்வில், பல்வேறு காலத்தை சேர்ந்த சிலைகள், நடுகற்கள் போன்ற சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட பலகை கற்கள், சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்கள் பயன்படுத்திய 5 கற்கருவிகள் இருப்பது தெரியவந்தது. இந்த இடத்தில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகள் வரை பழமையான பல பொருட்கள் கிடைக்கின்றன.

அரசு உண்டு உறைவிடப்பள்ளி அருகேயுள்ள விநாயகர் கோயிலில் சுமார் 20க்கும் மேற்பட்ட புதிய கற்கால கருவிகள் இப்போதும் மக்களின் வழிபாட்டில் உள்ளது.
மேல்வலசை கிராமத்தில் உள்ள கோயிலின் இரும்பு கருவிகள், 25க்கும் மேற்பட்ட கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், நூற்றுக்கும்  மேற்பட்ட பெருங்கற்கால கற்திட்டைகள் காணப்படுகின்றன. கற்திட்டை இடுதுளையுடன் கூடியதாகவும், நான்கு பக்கமும் செங்குத்து கற்களை வைத்தும், மேலே ஒரு பெரிய பலகைக்கல் வைத்தும் மூடப்பட்டுள்ளது.
இந்த கற்திட்டைக்குள் பீமாரப்பட்டியை சேர்ந்தவர்கள் சிலை வைத்து வழிவழியாக வணங்குகின்றனர். அதோடு, பல வடிவில் கற்திட்டைகள் உள்ளன. மேலும், இந்த பகுதியில் இரும்பை உருக்கி கருவில் செய்ததற்கான தடயங்கள் கிடைத்திருக்கிறது.

மற்றொரு இடத்தில் காணப்படும் கற்திட்டைகள் நான்கு பக்கமும் கற்கள் வைத்து அடுக்கி மேலே பலகைக்கல் வைத்து மூடப்பட்டுள்ளது. அதே அமைப்பில், ஆற்றை ஒட்டிய மற்றொரு இடத்திலும் காணப்படுகிறது. கற்குவையுடன் கூடிய கற்திட்டைகள், பூமிக்குள் புதைந்திருக்கும் கல் பதுகைகள் என பலவகை வடிவில் காணப்படுகின்றன என்றார்.
மேலும், இது தொடர்பாக தொல்லியல் ஆய்வாளர் கா.ராஜன் கூறியதாவது:

‘இந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள புதிய கற்காலத்தை சேர்ந்த கற்கருவிகள் மிகவும் தனித்தன்மையானது. தொடர் ஆய்வு இந்த பகுதியில் நடைபெற வேண்டும். புதிய கற்கால மக்கள் வாழ்ந்த வசிப்பிடங்கள், பாறை ஓவியங்கள் போன்றவை குறித்தும் ஆய்வு செய்தால் மேலும் பல பண்பாட்டு தகவல்கள் கிடைக்கும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், ஜவ்வாதுமலைக்கும், கல்வராயன் மலைப்பகுதிக்கும் இடையே உள்ள செங்கம் கணவாய், தென்பெண்ணையாறு பகுதி, பாம்பாற்று பகுதி ஆகிய இடங்களில் நூற்றுக்கணக்கான தொல்லியல் சுவடுகள் கிடைத்து வருகிறது. எனவே, அவற்றை அரசு பாதுகாத்து ஆவணப்படுத்த வேண்டும்’ என்றார்.

Tags : Calvarayan Mountain ,Dandarambathu , Thiruvannamalai: In the Kalvarayan hill villages near Thandarambattu, 5,000 year old stone tools have been found.
× RELATED தண்டராம்பட்டு அருகே கோயில்களில்...