×

கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட காரணமாக இருந்த ஜெயலலிதா இதய வால்வ் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை செய்யாதது ஏன்?.. அப்போலோ டாக்டர்கள் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்தில் மீண்டும் விசாரணை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த ஆணையத்தில் ஏற்கனவே 154 பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்து இருந்தனர். அவர்களில் தற்போது ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் மட்டும் மறு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.  நேற்று நடந்த விசாரணையில் டாக்டர்கள் அருள் செல்வம், பாபு மனோகர், ராமகிருஷ்ணன், சுந்தர், தொழில்நுட்ப உதவியாளர் காமேஷ் ஆகிய 5 பேர் ஆஜராகினர்.

இவர்கள், ஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்த நிலையில், சசிகலா தரப்பின் கோரிக்கையை ஏற்று மறு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் எய்ம்ஸ் மருத்துவ குழுவில் இடம் பெற்றுள்ள இருதயவியல் துறை பேராசிரியர் டாக்டர் சந்தீப் சேத் தலைமையில், நுரையீரல் மருத்துவ துறை பேராசிரியர் டாக்டர் ஆனந்த் மோகன், மயக்கவியல் துறை பேராசிரியர் டாக்டர் விமி ரேவாரி, சிடிவிஎஸ் துறை பேராசிரியர் மிலிந்த் ஹோட், உட்சுரப்பியல் துறை பேராசிரியர் ராஜேஷ் கட்காவத், டாக்டர் அனந்த் நவீன் கே. ரெட்டி ஆகியோர் கொண்ட குழுவினர் காணொலி காட்சி மூலமாக கலந்து கொண்டனர்.

இந்த விசாரணையின் போது, கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே ஜெயலலிதா உடல் நிலை மோசமாக இருந்துள்ளது. இதனால், டாக்டர்கள் ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தினர். ஜெயலலிதா பிரசாரம் செய்யாவிட்டால் வெற்றி பெறுவது கடினம் என்பதால் பிரசாரத்திற்கு சென்றார். டாக்டர்களின் அறிவுறுத்தலின் படி சாலை மார்க்கமாக செல்லாமல், தனி விமானம் மூலம் பிரசாரம் மேற்கொண்டார். ‘தினமும் அரசு நிர்வாக பணி தொடர்பாக வேலையில் ஈடுபடுவதால், தினமும் அரசின் துறை சார்ந்த பைல்களை பார்க்க வேண்டியுள்ளது. தினமும் 16 மணி நேரம் வேலை இருக்கிறது. எனவே, என்னால் ஓய்வெடுக்க முடியாது’ என்று ஜெயலலிதா கூறியதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஜெயலலிதா முதல்வராக பதவியேற்பதற்கு முன்பே தலைசுற்றல், மயக்கம், துணையில்லாமல் நடக்க முடியாத சூழல் இருந்துள்ளது. அவர் பதவியேற்புக்கு முந்தைய நாள் உடல் பரிசோதனை செய்துகொண்டதாக டாக்டர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த வாக்குமூலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நிலையில், நரம்பியல் நிபுணர் மீனாட்சி சுந்தரம், இருதவியல் நிபுணர் மதன்குமார், தோல் மருத்துவர்  ரவிச்சந்திரன் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது, சசிகலா தரப்பு வழக்கறிஞர் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். அதன்பேரில் டாக்டர்கள் 3 பேரும்  வாக்குமூலம் அளித்தனர்.

இந்த விசாரணையின் மூலம் கடந்த 2016 செப்டம்பர் 22ம் தேதி ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன?, டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதாவுக்கு திடீரென கார்டியாக் அரெஸ்ட் வரக்காரணம் என்ன?, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சையின் போது விதிமீறல் நடந்ததா, ஜெயலலிதாவிற்கு இதய வால்வில் ஏற்பட்ட ெதாற்று பிரச்னைக்கு அறுவை சிகிச்சை செய்யாதது ஏன்?, ஜெயலலிதாவுக்கு தோல் தொடர்பான வியாதிகள் இருந்ததா, அந்த பிரச்னை சரி செய்யப்பட்டதா, ஜெயலலிதாவுக்கு நரம்பு தளர்ச்சி இருந்ததாக கூறுவது உண்மையா, என்ன காரணத்திற்காக அவருக்கு இந்த பிரச்னை ஏற்பட்டது என்பது தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு 3 டாக்டர்கள் பதில் அளித்ததாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : Jayalalithaa ,Apollo Doctors' , Why Jayalalithaa did not have surgery for the heart valve problem that led to the cardiac arrest? .. Apollo Doctors' sensational confession
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...