×

சித்தூர் அடுத்த கங்கா சாகரம் பகுதியில் இலவச நிலம் வழங்கக்கோரி ஸ்ரீலங்கா காலனியை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம்

சித்தூர் : சித்தூரில் நேற்று ஸ்ரீலங்கா காலனியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில், ஸ்ரீலங்கா காலனி சங்க தலைவர் ராஜா பேசியதாவது: சித்தூர் அடுத்த கங்கா சாகரம் பகுதியில் ஸ்ரீலங்கா காலனி உள்ளது. இந்த காலனியில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். 1991-ம் ஆண்டு நெல்லூரில் இருந்து எங்களை அழைத்து வந்து இப்பகுதியில் தங்க வைத்தனர். அனைவருக்கும் அப்போதைய அரசு இலவசமாக வீடுகள் கட்டி வழங்கியது. மேலும் நாங்கள் பணி செய்து கொள்ள நூல் மில் ஒன்றை அமைத்து அதன்மூலம் வேலை செய்து எங்கள் குடும்பத்தை காப்பாற்றி வந்தோம்.

தற்போது நூல் மில்லுக்கு சொந்தமாக மூன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. இந்த மூன்றரை ஏக்கர் நிலம் எங்கள் பகுதியில் வசிக்கும் மக்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கவேண்டும் என பலமுறை அதிகாரிகளிடம் மனு வழங்கினோம். ஆனால் எங்கள் மனு மீது அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் பகுதியை சேர்ந்த மக்கள் சுபநிகழ்ச்சிகளுக்கு  அந்த மூன்றரை ஏக்கர் நிலத்தை பயன்படுத்தி வந்தோம். ஆனால் தற்போது நூல் மில் அதிகாரிகள் அந்த இடத்தை முள்வேலி அமைத்து யாரும் பயன்படுத்தக்கூடாது என தெரிவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து பலமுறை மண்டல வருவாய் துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்கள் கோரிக்கைகளை மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுமட்டுமில்லாமல் எங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகிறார்கள். எங்கள் பகுதியில் அனைவரும் எஸ்சி எஸ்டி வகுப்பைச் சேர்ந்தவர்களே நாங்கள் இருக்கிறோம். ஆனால் மண்டல வருவாய்த்துறை அதிகாரிகள் நீங்கள் எஸ்சி- எஸ்டி என்பதற்கு ஆதாரத்தை காட்டினால் நாங்கள் உங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்குகிறோம் என தெரிவிக்கிறார்கள். நாங்கள் ஸ்ரீலங்காவில் இருந்து 1991ம் ஆண்டு ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்திற்கு குடி பெயர்ந்தோம். அங்கிருந்து எங்களை சித்தூர் பகுதிக்கு அழைத்து வந்து விட்டார்கள்.

தற்போது நாங்கள் ஜாதி சான்றிதழ்  ஆதாரத்தை எவ்வாறு எடுத்து வர முடியும். எனவே, எங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கினால் எங்கள் பிள்ளைகள் படிக்க முடியும். ஆகவே மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில் ஏராளமான ஸ்ரீலங்கா காலனி பகுதியை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர்.

Tags : Ganga Sagaram ,Chittoor , Chittoor: Members of the Sri Lankan colony staged a protest in Chittoor yesterday demanding various things.
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...