×

பாலக்கோடு சர்க்கரை ஆலையில் 2 ஆண்டுகளுக்கு பின் கரும்பு அரவை துவக்கம்-9.31 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி

தர்மபுரி : பாலக்கோட்டில் உள்ள சர்க்கரை ஆலையில், 2 ஆண்டிற்கு பிறகு நேற்று கரும்பு அரவை தொடங்கியது. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், திம்மனஅள்ளியில் உள்ள மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2021-22ம் ஆண்டு அரவை மற்றும் இணைமின் திட்ட தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை வகித்து, அரவை மற்றும் இணைமின் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் சங்கர், எம்எல்ஏக்கள் கே.பி.அன்பழகன், ஜி.கே.மணி, கோவிந்தசாமி, வெங்கடேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் கலெக்டர் திவ்யதர்சினி கூறியதாவது: தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கடந்த 2019-2020 மற்றும் 2020-2021 ஆகிய 2 ஆண்டுகள், வறட்சி காரணமாக கரும்பு அரவை செய்யப்படவில்லை. தமிழக முதல்வர் உத்தரவின்படி, நடப்பு 2021- 2022ம் ஆண்டுக்கான கரும்பு அரவை தொடங்கப்பட்டுள்ளது. நடப்பு அரவை பருவத்திற்கு 3,422 ஏக்கர் கரும்பு பதிவு செய்து, சுமார் 1.02 டன் கரும்பு அரவை மேற்கொள்ளப்படுகிறது.

1.03 லட்சம் குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்தும், இணைமின் நிலையத்தின் மூலம் ஆலை அரவைப் பருவத்தில், தினசரி 9.31 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதில் 3.02 மெகாவாட் மின்சாரம் ஆலை பயன்பாட்டிற்கு போக, மீதமுள்ள 6.24 மெகாவாட் மின்சாரம், தமிழக மின்சார வாரியத்திற்கு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கரும்பு தோட்டங்களிலிருந்து ஆலைக்கு கரும்பு கொண்டு வரும் பணியில் 48 லாரிகளும், 50 டிராக்டர்களும், 14 டிப்பர்களும், 26 மாட்டு வண்டிகளும் ஈடுபடுத்தப்பட உள்ளன.எனவே, அனைத்து விவசாயிகளும் சுத்தமான கரும்பை வெட்டி, ஆலைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏக்கள் தடங்கம் சுப்ரமணி, இன்பசேகரன், தமிழக விவசாய சங்க மாநில தலைவர் சின்னசாமி, தொமு நாகராஜன், பேரூராட்சி தலைவர்கள் பி.கே.முரளி, வெங்கடேசன், ஜெர்தலாவ் ஊராட்சி மன்றத்தலைவர் ஆனந்தன், சூடப்பட்டி சுப்பிரமணி, ஒன்றிய செயலாளர்கள் குட்டி, அன்பழகன், கோபால், விவசாய அணி ரவி, குமார், அடிலம் அன்பு, மருத்துவர் அனந்தன், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Balakod Sugar Mill , Dharmapuri: Sugarcane crushing started yesterday after 2 years at a sugar mill in Balakot. Dharmapuri District, Balakod Circle,
× RELATED ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியின்போது...