×

உடல்நலக்குறைவால்தான் ஜெயலலிதா இறந்தார்: டிடிவி.தினகரன் பேட்டி

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று மண்டல நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் டிடிவி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேனியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியதால் நல்ல பழக்கம். ஓ.பன்னீர் செல்வம் நிதானமானவர். யோசித்துதான் முடிவை எடுப்பார். அந்தவகையில் தான் தேனி ஆலோசனை கூட்டத்திலும் முடிவு செய்து தீர்மானம் எடுத்துள்ளனர். ஓ.ராஜா எனது நண்பர். அரசியல் ரீதியாக மட்டும் இல்லாமல் சாதாரணமாகவும் என்னை வந்து அவர்களது குடும்பத்தினர் பார்ப்பார்கள். ஓ.ராஜாவை கட்சியை விட்டு நீக்கியது எனக்கு வருத்தமாக உள்ளது.

அரசியலில் என்னை விட அனுபவத்தில் மூத்தவர்கள் இந்த இயக்கத்தில் உள்ளனர். என்னுடன் இருப்பவர்களின் விருப்பத்தை தெரிந்துகொண்டு தான் முடிவை எடுப்பேன். தனிப்பட்ட முறையில் எந்த முடிவையும் எடுக்க மாட்டேன். கொரோனா காரணமாக நிறைய நிர்வாகிகளை பார்க்கமுடியவில்லை. மீண்டும் நிர்வாகிகளை சந்திக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். மார்ச் 18ம் தேதி முதல் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாவட்டம் தோறும் சென்று அங்குள்ள நிர்வாகிகளை சந்திக்க உள்ளனர்.

ஜெயலலிதா உடல்நலக்குறைவால் இறந்தார் என்பதே உண்மை. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஜெயலலிதா தனித்துவமாக செயல்படக்கூடியவர். எந்த முடிவு என்றாலும் அவரே எடுப்பார். உக்ரைனில் உள்ள மாணவர்களை ஒன்றிய அரசு சரியான முறையில் கையாண்டு மீட்டு வருகிறார்கள். இவ்விவகாரத்தில் தமிழக அரசும் சரியான வகையில் செயல்படுகிறது. இவ்வாறு கூறினார்.

Tags : Jayalalithaa ,DTV.Dinakaran , Jayalalithaa died due to ill health: DTV.Dinakaran interview
× RELATED இடைத்தேர்தல் புறக்கணிப்பு சரியல்ல...