×

இந்தியாவின் செல்வாக்கால் `ஆபரேஷன் கங்கா’ வெற்றி: பிரதமர் மோடி பெருமிதம்

புனே: ‘உலக அரங்கில் வளர்ந்து வரும் இந்தியாவின் செல்வாக்கினால்தான் ‘ஆபரேஷன் கங்கா’ திட்டம் வெற்றி பெற்றது,’ என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். உக்ரைனில் போர் நடக்கும் நிலையில், அங்கு படிக்கும் இந்திய மாணவர்கள் உள்பட 20 ஆயிரம் இந்தியர்கள் சிக்கித் தவித்தனர். இவர்களை தாய் நாடு அழைத்து வர ‘ஆபரேஷன் கங்கா’ திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் 13,700 பேர் இந்தியா அழைத்து வரப்பட்டதாக ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம், புனேயில் உள்ள சிம்பயோசிஸ் பல்கலைக் கழகத்தின் பொன் விழாவில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது: போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் இந்தியர்கள் பாதுகாப்பாக தாய்நாடு அழைத்து வரப்படுகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா பரவிய போது இந்தியா அதனை வெற்றிகரமாக கையாண்டது. அதே போல், தற்போது உக்ரைனில் போர் நிலவும் சூழ்நிலையும் கையாளப்படுகிறது. மிகப் பெரிய நாடுகள் கூட உக்ரைனில் சிக்கித் தவித்த தங்களின் குடிமக்களை மீட்க சவால்களை எதிர் கொண்டன.

அதே நேரம், உலக அரங்கில் அதிகரித்து வரும் இந்தியாவின் செல்வாக்கினால் அங்குள்ள இந்தியர்களை எளிதாக மீட்க முடிந்தது. எந்தெந்த துறைகளில் இந்தியா தனது சொந்த முயற்சியில் முன்னேற முடியாது என்று கருதியதோ, அந்த துறைகளில் தற்போது முன்னணியில் இருக்கிறது. செல்போன், எலக்ட்ரானிக்ஸ், பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி ஆகியவற்றை எடுத்துக்காட்டாக கூறலாம். இன்று நாடு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. விரைவில் நாட்டின் பாதுகாப்புக்கு தேவையான அதி நவீன ஆயுதங்கள், தளவாடங்களும் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இந்தியாவில் புதிய கண்டுபிடிப்புகள் மேம்படுத்தப்பட்டு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Operation Ganga ,India ,Modi , Operation Ganga a success due to India's influence: Prime Minister Modi is proud
× RELATED டெல்லியில் சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 8 பேரை கைது செய்தது போலீஸ்!