கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது: அதிமுகவுக்கு துணை தலைவர் பதவி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த அ.சகிலா அறிவழகனும், துணை தலைவராக  அதிமுகவை சேர்ந்த எம்.கேசவனும் வெற்றி பெற்றுள்ளனர். கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தேர்தலில் 9 திமுக கவுன்சிலர்கள், 3 அதிமுக கவுன்சிலர்கள், 1 விசிக, 1 பாமக, 1 சுயேச்சை கவுன்சிலர்  ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்நிலையில், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுகவை சேர்ந்த அதிகாரப்பூர்வ வேட்பாளராக அ.சகிலா அறிவழகனும், அவரை எதிர்த்து திமுக சார்பில் துர்கேஷ்வரி பாஸ்கரும் போட்டியிட மனுதாக்கல் செய்தனர். தொடர்ந்து பேரூராட்சி தலைவர் தேர்தல் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் ப.யமுனா தலைமையிலும், இளநிலை உதவியாளர் பிரபாகரன், தூய்மை பணி மேற்பார்வையாளர் குமார், பதிவரை எழுத்தர் ரவி, வரி தண்டலர் குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

மறைமுகமாக நடைபெற்ற இந்த தேர்தலில் 15 கவுன்சிலர்களும் ஒருவர் பின் ஒருவராக வாக்கு பெட்டியில் வாக்களித்தனர். தொடர்ந்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது திமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் அ.சகிலா அறிவழகனுக்கு 9 ஓட்டுகளும், திமுக வேட்பாளர் துர்கேஷ்வரி பாஸ்கருக்கு 6 ஓட்டுகளும் கிடைத்த நிலையில் திமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் சகிலா அறிவழகன் வெற்றி பெற்றார். பின்னர் துணை தலைவர் பதவிக்கு திமுக சார்பில் எஸ்.கருணாகரனும், அதிமுக சார்பில் எம்.கேசவன் போட்டியிட்டனர். அப்போது 15 வார்டு கவுன்சிலர்களும் உறுப்பினர் ஒருவர் மறைமுகமாக துணை தலைவர் பதவிக்கு வாக்களித்தனர். பின்னர் அதிமுக சார்பாக போட்டியிட்ட எம்.கேசவன் 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.கருணாகரன் 5 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

Related Stories: