×

தேவகோட்டையில் அமமுக ஆதரவுடன் அதிமுக வேட்பாளர் வெற்றி: திமுக, காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்ததால் போட்டியின்றி தேர்வு

சிவகங்கை: தேவகோட்டை நகராட்சி தலைவர் பதவியை அமமுக ஆதரவுடன் அதிமுக கைப்பற்றி உள்ளது. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை  பொறுத்தவரையில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளது. இதில் அமமுக 5 இடங்களிலும், அதிமுக 10 இடங்களிலும், திமுக 5 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களையும் கைப்பற்றியது. நகர்மன்றத் தலைவர் பதவிக்கு எந்த கட்சியினருக்கும் பெரும்பான்மை இல்லாததால் குழப்ப நிலை நீடித்து வந்தது. இதையடுத்து, அமமுக ஆதரவுடன் தேவகோட்டை நகர்மன்றத் தலைவர் பதவியை கைப்பற்ற அதிமுக முயற்சி செய்தது.

திமுக, காங்கிரஸ் கூட்டணி 11 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், 19 ஆவது வார்டில் சுயேச்சையாக வெற்றி பெற்ற ஞானம்மாள் திமுகவில் இணைந்தார். இருப்பினும் தலைவர் பதவிக்கு திமுகவிடம் பெரும்பான்மை இல்லாமல் இருந்தது. எனவே 24 ஆவது வார்டில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் வி.பிச்சையம்மாள் கடத்தப்பட்டிருப்பதாக திமுகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுபற்றி தகவலறிந்த அதிமுகவினர் தேவகோட்டை நகர்மன்றத் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்ற உள்ளதையடுத்து, தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலை ஒத்தி வைக்க முயற்சி நடப்பதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த.செந்தில்குமார் ஆகியோரிடம் மனு அளித்தனர்.

தேவகோட்டை நகர்மன்றத் தலைவர் பதவி மறைமுகத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிஅளவில் தொடங்க உள்ளதாக, தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான அசோக்குமார் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிக்கை அனுப்பியிருந்தார். அதன்படி, அதிமுக, திமுக, அமமுக, காங்கிரஸ் கட்சியினை சேர்ந்த உறுப்பினர்கள் 27 பேரும் நகராட்சி அலுவலகத்துக்கு உரிய நேரத்தில் வருகை தந்தனர். ஆனால் நகராட்சி ஆணையர் அசோக்குமாருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நகர்மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தல் காலை 10.30 மணி வரை நடைபெறவில்லை. இதனால் திமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதிமுக, அமமுக உறுப்பினர்கள் நகராட்சி அலுவலகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ச்சியாக 3 முறை தள்ளிவைக்கப்பட்ட நிலையில், இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் போட்டியின்றி மொத்தம் 26 வார்டுகளில் 15 வாக்குகள் பெற்ற அதிமுகவை சேர்ந்த சுந்தரலிங்கம் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இதில் திமுக கூட்டணியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Amuka ,Tavakotta ,DiMuka ,Congress party , Devakottai, AIADMK, AIADMK, support, victory
× RELATED கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின்...