×

ஆம்பூர் அருகே வன உயிரின நாளில் மர்மமாக இறந்த 2 ஆண் மயில்கள்: பிரேத பரிசோதனைக்கு பைக்கில் எடுத்துச் சென்ற அவலம்

ஆம்பூர்: ஆம்பூர் அருகே வன உயிரின நாளில் மர்மமான முறையில் 2 ஆண் மயில்கள் இறந்தன. ஒரு சில மயில்கள் உயிருக்கு போராடிய நிலையில் காட்டுக்குள் சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வனசரகத்திற்குட்பட்ட துருகம் காப்பு காட்டில் பல்வேறு வன உயிரினங்கள் வசித்து வருகின்றன. மான், யானை, மலைபாம்பு மற்றும் அதிக அளவில் மயில்கள் வசித்து வருகின்றன. இந்த காட்டை ஒட்டி பல்வேறு விவசாய நிலங்கள் , செங்கல் சூளைகள் உள்ளன.

இந்த விவசாய நிலங்களில் இரை தேடி அடிக்கடி மயில்கள் வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை சுமார் 10 மணியளவில் அதேபகுதியில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியரான கோவிந்தசாமி என்பவரது மாந்தோப்பில் சிலர் கால்நடைகளை மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென வழக்கத்திற்கு மாறாக அதிக அளவிலான மயில்கள் குவிந்து இருப்பதை கண்டனர். உடன் அருகில் சென்று பார்த்தபோது தோகையுடன் கூடிய 2 ஆண் மயில்கள் உயிரிழந்து கிடப்பதை கண்டனர்.

உடனடியாக கால்நடை மேய்த்து கொண்டிருந்தவர்கள் ஆம்பூர் வன சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அங்கு விஏஓ பிரிவிதா, வனவர் பாலகிருஷ்ணன், வன காப்பாளர்கள் ராஜ்குமார், கணேஷ் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்து கிடந்த மயில்களின் சடலங்களை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர், அவற்றை பிரேத பரிசோதனை செய்வதற்காக அருகில் உள்ள மிட்டாளம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு டாக்டர் இல்லாததால் கால்நடை பராமரிப்பு துறையினரை அணுகினர்.

அப்போது மிட்டாளம் கால்நடை டாக்டர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், திருப்பத்தூர் அடுத்த கொரட்டியில் பணி புரிந்து வரும் டாக்டர் ஆம்பூர் தாலுகாவில் உள்ள கரும்பூர், கதவாளம், அரங்கல்துருகம், மிட்டாளம் ஆகிய 8க்கும் மேற்பட்ட இடங்களில் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருவதாகவும் தெரியவந்தது. பின்னர், அந்த டாக்டரை தொடர்பு கொண்ட வனத்துறையினர் அவர் கேட்டு கொண்டதன் பேரில் இரண்டு மயில் சடலங்களை கால்நடை மருந்தக உதவியாளருடன் இரு சக்கர வாகனத்தில் சுமார் 50 கிமீ தூரம் எடுத்து சென்றனர்.

மேலும், அங்கிருந்த மயில்களில் சில உயிருக்கு போராடிய நிலையில் அருகில் உள்ள வனப்பகுதிக்கு தப்பி சென்றுள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். வன உயிரின நாளில் ஆம்பூர் அருகே இரு மயில்கள் இறந்தது குறித்து வன ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தேசிய பறவைகள் இறந்தது ஏன்?
தேசிய பறவையான மயில்கள் இறந்தது ஏன்? அவற்றின் தோகை, இறைச்சிக்காக அவற்றை யாராவது விஷ உணவு அளித்து கொன்றார்களா? அல்லது வேறு ஏதும் நோய் காரணமாக அவை இறந்தனவா? என உரிய அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பினரிடையே ஏற்பட்டுள்ளது.

உடற்கூறு ஆய்வுக்கு 50 கிமீ பைக் பயணம்
ஆம்பூர் அருகே உள்ள பல்வேறு கால்நடை மருந்தகங்களில் போதிய டாக்டர்கள் இல்லாததால் அப்பகுதியில் வசித்து வரும் கால்நடை வளர்ப்போர் கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க இயலாமல் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில், தேசிய பறவையான மயில்கள்உடற்கூறு ஆய்வுக்காக ஜீப் இல்லாததால் பைக்கில் மூட்டைகளில் கட்டப்பட்டு சுமார் 50 கிமீ தூரம் பயணிக்க வேண்டிய அவல நிலை உள்ளதாக பல்வேறு கிராமத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.



Tags : Ambur , 2 male peacocks mysteriously died on wildlife day near Ambur: The tragedy of being taken on a bike for autopsy
× RELATED ஆம்பூர் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் புகை: 2 மணி நேரம் பயணிகள் தவிப்பு