×

குண்டுகளுக்கு இது இந்தியர்கள், உக்ரைன் நாட்டினர், ரஷியர்கள் என்ற வித்தியாசம் தெரியாது : ஒன்றிய அமைச்சர் பேச்சு

டெல்லி : உக்ரைனின் தலைநகர் கீவ்வில் இருந்து வெளியேற முயன்றபோது, துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் இந்திய மாணவர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்திய மாணவர்கள் மீட்பு நடவடிக்கைகள் குறித்து போலாந்தில் பேசிய ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங், ரஷியாவின் உக்கிரமான தாக்குதல்களுக்கு இடையே பெரும் சவால்களை சந்தித்து இந்தியர்களை மீட்டு தாயகம் அனுப்பி வருவதாக கூறினார். ஏற்கனவே ரஷியாவின் தாக்குதலில் சிக்கி கார்க்கிவ்வில் இந்திய மாணவர் நவீன் உயிரிழந்ததை சுட்டிக் காட்டிய அவர், கீவ் நகரில் இருந்து வெளியேற முயன்ற மற்றொரு இந்திய மாணவர் தாக்குதலில் சிக்கி படுகாயம் அடைந்துள்ள தகவல் கிடைத்து இருப்பதாக கூறினார்.

போர்க்களத்தில் இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுவது இயல்பு தான் என்றும் வி.கே.சிங் குறிப்பிட்டார், குண்டுகளுக்கு இது இந்தியர்கள், உக்ரைன் நாட்டினர், ரஷியர்கள் என்ற வித்தியாசம் தெரியாது என்று கூறிய அமைச்சர், பெரும் சவால்களுக்கு இடையே இந்திய மாணவர்களை மீட்டு வருவதாக தெரிவித்தார். குறைந்தபட்ச இழப்புகளை மட்டும் சந்தித்து அதிகபட்சமான மாணவர்களை வெளியேற்ற முயற்சி செய்து வருவதாகவும் அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார். போர் களத்தில் மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளாவது தவிர்க்க முடியாதது என்ற ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங்கின் பேச்சு கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Indians ,Ukrainians ,Russians ,Union Minister , Bombs, Indians, Ukraine, Russians
× RELATED கம்போடியாவில் இருந்து 60 இந்தியர்கள் மீட்பு