×

திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை

திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் நகர மன்ற துணைத் தலைவர் வேட்பாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிக்கான மேயர் மற்றும் துணை மேயர் பதவி, 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வார்டு கவுன்சிலர்கள் மறைமுக வாக்களிக்க உள்ளனர்.

இன்று காலை 9.30 மணிக்கு மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர்களுக்கான தேர்தல்களும், பிற்பகல் 2.30 மணிக்கு துணை மேயர் மற்றும் துணை தலைவர்களுக்கான தேர்தல்களும் நடைபெற உள்ளது. இந்த சூழலில் திருத்துறைபூண்டி நகர்மன்ற துணைத்தலைவர் பதவிக்கு ராமலோக ஈஸ்வரி எனும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டார். நகராட்சி துணைத்தலைவர் பதவிக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெறும் நிலையில், திருத்துறைப்பூண்டி நகராட்சியின் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ராமலோக ஈஸ்வரி வீட்டின் மீது மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

இதில் வீடு தீப்பற்றிய நிலையில், அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களை தேடி வருகின்றனர். நகர மன்றத் துணைத் தலைவராக போட்டியிடும் வேட்பாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Marxist ,Thiruthuraipoondi , Thiruthuraipoondi, Marxist, petrol bomb, mysterious person, investigation
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...