மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பங்காரு அடிகளாரின் 82வது பிறந்தநாள் விழா கடந்த 28ம் தேதி தொடங்கி தொடர்ந்து 4 நாட்கள் நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை 3 மணிக்கு ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் தொடங்கிய விழாவில் வழக்கறிஞர் அகத்தியன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். மாலை சித்தர் பீட வளாகத்தில் ரூ.3 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தெலங்கானா ஆளுநர் தமிழிசை, பங்காரு அடிகளார் முன்னிலையில் விழா மலரை வெளியிட, லட்சுமி பங்காரு அடிகளார் பெற்று கொண்டார்.
இந்நிலையில், அடிகளாரின் பிறந்தநாள் விழா நேற்று காலை சித்தர் பீடத்தில் மங்கள இசையுடன் கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி சித்தர் பீடம் முழுவதும் வண்ண விளக்குகளாலும் தோரணங்களாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டது. காலை 9 மணியளவில் பங்காரு அடிகளாரை, செவ்வாடை பக்தர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். சித்தர்பீடம் வந்த பங்காரு அடிகளார் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தார். தொடர்ந்து பங்காரு அடிகளாரின் பிறந்தநாள் கேக்கை, அவரது பேர குழந்தைகள் வெட்டி கொண்டாடினர். பின்னர் பக்தர்களுக்கு, பங்காரு அடிகளார் ஆசி வழங்கினார்.
இதில், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான், எம்எல்ஏ பனையூர் பாபு, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி கே.பாஸ்கரன், ஓய்வு பெற்ற தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஜெயந்த், ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராஜேஸ்வரன், முருகேசன், இசை அமைப்பாளர்கள் தேவா, ஸ்ரீகாந்த் தேவா உள்பட முக்கிய பிரமுகர்களும், தொழிலதிபர்களும், ஆன்மிக இயக்க பொறுப்பாளர்களும், செவ்வாடை பக்தர்களும், பொதுமக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றனர்.
நிகழ்ச்சியில், ஆதிபராசக்தி மருத்துவமனை இயக்குனர் ரமேஷ், கல்வி நிலையங்களின் தாளாளர் உமாதேவி ஜெய்கணேஷ், தொழிலதிபர் ஜெய்கணேஷ், வழக்கறிஞர் அகத்தியன், ஆஷா அன்பழகன், ஸ்ரீலேகா செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.