×

கட்சியில் சேர்ப்பது தொடர்பாக ஒட்டுமொத்த அதிமுக முடிவுக்காக காத்திருக்கிறேன்: டிடிவி தினகரன் பேச்சு

சென்னை: கட்சியில் சேர்ப்பது தொடர்பாக ஒட்டுமொத்த அதிமுக முடிவுக்காக காத்திருக்கிறேன் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், அமமுக தொண்டர்களின் முடிவுதான் என்னுடைய முடிவு. தனிப்பட்ட முறையில் என்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது; நாங்கள் தவறு செய்யவில்லை. ஒட்டுமொத்த அதிமுகவின் முடிவு வந்த பிறகுதான் எனது முடிவை அமமுகவினருடன் ஆலோசித்து எடுப்பேன். சுயபரிசோதனை செய்ய வேண்டிய இடத்தில் இருப்பதால் அதிமுகவில் குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது.

தேனி மாவட்ட நிர்வாகிகள் சுயபரிசோதனை செய்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கலாம். சுயபரிசோதனை செய்ய வேண்டிய இடத்தில் அதிமுகவினர் இருக்கிறார்கள். அதன் விளைவு தான் அதிமுக நிர்வாகிகள் தீர்மானம். அம்மாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டுவருவதுதான் அமமுகவின் லட்சியம். அம்மாவின் ஆட்சியை கொண்டு வர எனது சுவாசம் உள்ளவரை போராடுவேன். ஒட்டுமொத்த அதிமுகவும் ஏற்றுக்கொண்டால் எனது தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து முடிவை அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் உள்ள அனைவருமே எனது முன்னாள் நண்பர்கள் தான் என்றும் டிடிவி தினகரன் குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சசிகலா, தினகரன் இணைப்பு குறித்து பேசி உள்ளனர். சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என தேனியில் அதிமுக நிர்வாகிகள் ஓ.பி.எஸ்.யிடம் வலியுறுத்தி இருந்தனர். மீண்டும் மீள்வதற்கான தலைமை அதிமுகவில் தற்போது இல்லை. சசிகலா அல்லது தினகரன் தலைமை ஏற்க வேண்டும். சசிகலா, டிடிவி தினகரன் தலைமையில் அதிமுக செயல்பட வேண்டும். தற்போதுள்ள தலைமையால் எதுவும் செய்ய முடியாது என அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியும் கருத்து தெரிவித்திருந்தார்.


Tags : TTV ,Dinakaran , Party, AIADMK decision, DTV Dhinakaran
× RELATED தேர்தல் முடிவு வெளியாகும் வரை வாக்கு...