×

தியேட்டர்களுக்கான மாஸ் படம் எதற்கும் துணிந்தவன்: சூர்யா பேச்சு

சென்னை: தியேட்டர்களுக்கான மாஸ் படமாக எதற்கும் துணிந்தவன் இருக்கும் என நடிகர் சூர்யா கூறினார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் படம் எதற்கும் துணிந்தவன். சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரித்துள்ளார். பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இமான் இசையமைத்துள்ளார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா, விநய், சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் மார்ச் 10ம் தேதி திரைக்கு வருகிறது. படத்துக்கான டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

இதில் சூர்யா பேசியதாவது: தியேட்டர்கள் மூலமாதான் நான் நிறைய கற்றுக்கொண்டேன். நான் செய்தது நல்ல படமா, கெட்ட படமா, இதில் என்ன மாற்றம் பண்ண வேண்டும் என்பதையெல்லாம் தியேட்டர்களில்தான் கற்றுக்கொண்டேன். உங்கள் மூலம்தான் (ரசிகர்கள்) படத்துக்கான ரியாக்‌ஷனை அறிய முடிந்தது. அந்த வகையில் சரியாக இரண்டரை வருடத்துக்கு பிறகு எனது படம் தியேட்டரில் வெளியாகிறது. இடையில் சூரரைப் போற்று, ஜெய் பீம் படங்கள் ஓடிடியில் வெளியானது. இந்த படம் தியேட்டரில் வருவது மகிழ்ச்சி. இது முழுக்க முழுக்க தியேட்டருக்கான மாஸ் படமாக பாண்டிராஜ் கொடுத்திருக்கிறார்.

சத்யராஜ் மாமா, அப்பா மேல் வைத்துள்ள அன்பு, மரியாதை மற்றும் அவர் எங்கள் குடும்பத்தின் மீது காட்டும் அக்கறையெல்லாம் ஆசிர்வாதமாக பார்க்கிறேன். சினிமா தவிர எனது ஏதாவது கருத்து, அறிக்கை, பேச்சு எல்லாமே உங்களுக்காக (மக்களுக்காக). அது பற்றியும் சத்யராஜ் மாமா என்னிடம் பேசுவார். அவர் இதை கண்டிப்பாக செய், இது நல்ல கருத்து என்றெல்லாம் ஊக்கம் தருவார். இமான் சார் இசை இந்த படத்துக்கு பெரிய ஆதரவாக இருந்துள்ளது. பாடல்கள் மட்டுமின்றி, பின்னணி இசையிலும் உயிர் கொடுத்துள்ளார்.

அயன், சிங்கம் படங்கள் சன் பிக்சர்ஸ் உடன் இணைந்து வழங்கிய படங்கள். அந்த படங்கள் தியேட்டர்கள் வரை சென்றடைய வைக்கும் முறை, அந்த படங்களுக்கான கொண்டாட்டம், ஆரவாரம், அந்த படங்களை மக்களிடம் வழங்கும் முறை என எல்லாமே மறக்க முடியாது. அதற்கு காரணம், சன் பிக்சர்ஸ்தான். இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலே நடித்திருப்பது மகிழ்ச்சி. சரியான தருணத்தில் சரியான படத்தில் நாங்கள் இணைந்துள்ளோம். இதற்காக சன் பிக்சர்ஸ் டீமுக்கு நன்றி. ஒரு படம் சிறப்பாக வர ஒருவருடைய எண்ணம் நல்லெண்ணமாக இருப்பது முக்கியம். அவர், இயக்குனர். அந்த வகையில் நல்ல மனிதராக பாண்டிராஜ் சார் கிடைத்திருக்கிறார். இதுவரை யாரும் பேசாத, விவாதம் செய்யாத ஒரு விஷயத்தை பற்றியும் படம் பேசியுள்ளது. அது எமோஷனலாக மக்களை சென்றடையும். இவ்வாறு சூர்யா பேசினார்.


பாண்டிராஜ்: ஒரு நல்ல கதை தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு தனக்குரிய நடிகர், நடிகைகளையும் டெக்னீஷியன்களையும் தானே தேர்வு செய்துகொள்ளும் எதற்கும் துணிந்தவன் படமும் அப்படித்தான். இந்த படம் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் விதமான பொழுதுபோக்கு படமாக இருக்கும்.

சத்யராஜ்: நான் சென்னைக்கு வந்து 45 வருடம் ஆகிறது. சூர்யாவையும் எனக்கு 45 வருடமாக தெரியும். ஆனால் அவருடன் இப்போதுதான் சேர்ந்து நடிக்கிறேன். இதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த சன் பிக்சர்ஸுக்கும் பாண்டிராஜுக்கும் நன்றி. விழாவில் சூர்யா பேசும்போது, போரில் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்காகவும் அங்குள்ள இந்தியர்களுக்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து விழாவில் அனைவரும் எழுந்து நின்று ஓரிரு நிமிடம் அமைதியாக பிரார்த்தனை செய்தனர். பிரியங்கா அருள் மோகன், விநய், சூரி, இளவரசு, திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் இமான், சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி செம்பியன், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, எடிட்டர் ரூபன், ஆர்ட் டைரக்டர் ஜாக்கி உள்பட பலர் கலந்துகொண்டனர்

* டிரைலர் வெளியீடு
எதற்கும் துணிந்தவன் படத்தின் டிரெய்லர் நேற்று பகல் 11 மணிக்கு வெளியிடப்பட்டது. டிரெய்லரில், சூர்யாவின் மாஸான ஆக்‌ஷன் காட்சிகள், பிரியங்கா அருள் மோகனுடன் பேசும் ரொமான்டிக் காட்சிகள், சத்யராஜ், விநய், சூரி உள்ளிட்டோர் வரும் காட்சிகளும் இடம்பெற்றன. படத்தில் இருக்கும் ஆக்‌ஷன், சென்டிமென்ட், காதல், காமெடி என அனைத்து அம்சங்களும் டிரெய்லரில் வெளிப்பட்டது. இந்த டிரெய்லர் சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங் ஆனது.

Tags : Surya , Mass film for theaters is daring for anything: Surya talk
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்