×

கும்பாபிஷேகம் நடந்த கொஞ்ச நாளில் விபரீதம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் 3 கலசங்கள் திருட்டு

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் அம்மன் சன்னதி மீதிருந்த 3 கோபுர கலசங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த பிரசித்திபெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. 1008 சிவத்தலங்களில் முக்கிய 4 தலங்களில் விருத்தகிரீஸ்வரர் கோயிலும் ஒன்றாக விளங்குகிறது. காசியை விட வீசம் அதிகம் விருத்தகாசி என்ற பழமொழி சிறப்பினை கொண்டுள்ளது. சிவபெருமான் முதன் முதலில் இங்குதான் மலைவடிவில் காட்சியளித்தார் எனவும், பல கோயில்களில் கிடைக்கும் வரங்களை இந்த ஒரே கோயிலில் பெறலாம் என்பதும், இக்கோயிலில் இறைவனை வழிப்பட்டால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோயிலில் 5 கோபுரங்கள், 5 நந்திகள், 5 பிரகாரங்கள், 5 தீர்த்தங்கள், 5 தேர்கள் என அனைத்தும் ஐந்தால் ஆன சிறப்பம்சத்தை கொண்டது.

இந்நிலையில் 20 வருடங்களுக்கு பிறகு கோயில் புனரமைக்கப்பட்டு கடந்த மாதம் 6ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கோயிலில் ஐந்து கோபுரங்களிலும் உள்ள விமான கலசங்கள் புதுப்பிக்கப்பட்டதுடன், மூலவர் சன்னதி கோபுரத்தில் ஒரு கலசமும், மூலவர் சன்னதிக்கு வடபுறம் உள்ள விருத்தாம்பிகை அம்பாள் சன்னதியில் 3 கலசங்களும் என நான்கு செம்புகளில் ஆன கலசங்களில் கலசத்திற்கு 95 கிராம் என 380 கிராம் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் கோபுரத்தில் பொருத்தப்பட்டது. கும்பாபிஷேகம் முடிந்து 48வது நாளான மார்ச் 27ம் தேதி வரை மண்டலாபிஷேகம் நடைபெற இருந்ததால், கோபுரத்திற்கு செல்லும் அனைத்து வழிகளும், திறந்தும், கோபுரம் மேல் ஏறி செல்வதற்கு கட்டப்பட்ட படிக்கட்டுகளும் அப்படியே இருந்தன.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் அனைத்து பூஜைகளையும் முடித்துவிட்டு கோயில் செயல் அலுவலர் மாலா மற்றும் குருக்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர். 2 இரவு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அதிகாலை 5 மணியளவில் கோயிலை சுற்றி உள்ள வீதிகளில் நடைபாதை செல்லும் பொதுமக்கள், கோயில் கலசங்கள் அப்புறப்படுத்தப்பட்டு இருப்பதை பார்த்து, கோயில் பணியாளர்களிடம் கூறியுள்ளனர். இதையடுத்து கோயில் செயல் அலுவலர் மாலா மற்றும் ஊழியர்கள் கோபுரத்தில் சென்று பார்த்தபோது விருத்தாம்பிகை அம்பாள் சன்னதி கோபுரத்தில் இருந்த மூன்று கலசங்கள் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், கடலூர் மாவட்ட எஸ்பி சக்தி கணேசன், ஏஎஸ்பி அங்கிட் ஜெயின், இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் கோயில் கோபுரங்களில் நான்கு சுற்றுப் பகுதிகளிலும் உள்ள கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில், வடக்கு கோபுரம் அருகே உள்ள தனியார் கட்டடத்தில் இருந்து மர்ம நபர்கள் சுற்றுச் சுவரில் ஏறி குதித்து கோபுர கலசத்தை திருடி சென்றிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. மேலும் கோயிலில் பொருத்தப்பட்டுள்ள 32 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் கடலூரிலிருந்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு கலசமும் சுமார் 3 அடி உயரம் கொண்ட 95 கிராம் தங்க முலாம் பூசப்பட்ட கலசம் என்பதால் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது.கும்பாபிஷேகம் நடைபெற்று இன்று 22ம் நாள் மற்றும் மகா சிவராத்திரி மிகவும் சிறப்பாக நடைபெற இருக்கும் சூழ்நிலையில் கோயில் கலசங்கள் திருடுபோன சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Virudhachalam Viruthakriswarar temple , Kumbabhishekam, perversion, Viruthakriswarar, urns, theft
× RELATED விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்