சென்னை, கோவை மண்டல களப்பணியில் முறைகேடு 15 நாட்களில் அறிக்கை வழங்க வேண்டும்: பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவு

சென்னை: சென்னை, கோவை மண்டலத்தில் களப்பணியில் நடந்த முறைகேடு தொடர்பாக புகார் வந்துள்ளது. இது குறித்து 15 நாட்களில் சார்பதிவாளர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் போலி ஆவணங்களை காட்டி பத்திரப்பதிவு குறித்து வந்துள்ள புகார்கள் குறித்து மறு ஆய்வு செய்து 1 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி டிஐஜிக்களுக்கு உத்தரவிட்டுள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.

குறிப்பாக, பொதுமக்கள் பத்திரம் பதிவு செய்த அன்றைய தினமே ஆவணங்கள் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பதிவுத்துறை சார்பில் நிலுவையில் வைக்கப்பட்ட ஆவணங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவாய் ஈட்டப்பட்டன. அதே போன்று சரியான வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்து, ஆவணங்கள் பதிவு செய்யும் நிலை தற்போது உருவாகியுள்ளது. இதன் காரணமாக பத்திரப்பதிவுத்துறையின் வருவாய் பல மடங்கு பெருகியுள்ளது. நடப்பாண்டில் தற்போது வரை ரூ.12 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி வருகிறது.

இந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மாநிலத்தில் பல இடங்களில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து பத்திரப்பதிவு செய்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், களப்பணியில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாக தெரிகிறது. அதே நேரத்தில் பல சார்பதிவாளர் அலுவலகங்களில் வழிகாட்டி மதிப்பை குறைத்து பத்திரப்பதிவு செய்து இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, ஐஜி சிவன் அருள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பதிவுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது:

* பதிவுத்துறை வருவாய் இலக்கை அனைவரும் அடைய வேண்டும். இலக்கை அடையாத சார்பதிவாளர் அலுவலகங்களுக்கான காரணங்களை கண்டறிய வேண்டும். நிலுவை ஆவணங்களை ஆய்வு செய்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* 22 ஏ இனங்கள் பொருத்து (போலியான ஆவணங்களை காட்டி பத்திரப்பதிவு தொடர்பாக) மாவட்ட பதிவாளர் மற்றும் டிஐஜி மீள் ஆய்வு செய்து 1 வாரகாலத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இதில் தவறுகள் இருந்தால் அதாவது ஆய்வுக்கு பிறகு 22ஏ கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் பொறுப்பு கிடையாது. மாவட்ட பதிவாளர் மற்றும் டிஐஜி மட்டுமே பொறுப்பாவார்.

* சென்னை மற்றும் கோவை மண்டலத்தில் களப்பணியில் முறைகேடு நடப்பதாக தகவல் வந்துள்ளதால் இந்த மண்டலங்களில் கண்காணிப்பு செய்து 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

* இதர மண்டலங்களில் புகார் வந்தால் இது போன்ற குழு அமைக்கப்படும்.

* குக்கிராமம் மற்றும் தாலுகா வாரியாக கிராமங்கள் மறுசீரமைப்பை விரைவு படுத்தி முடிக்க வேண்டும். குறிப்பாக இது தொடர்பாக எனக்கு தெரியவில்லை என்று பொதுமக்களிடமிருந்து புகார் வரக்கூடாது. ஆதலால் மாவட்ட பதிவாளர் அளவில் நாளிதழில் விளம்பரம் கொடுக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகளுக்கு இவ்விஷயம் தெரிவிக்கப்பட வேண்டும். அதன்பிறகு மக்கள் கருத்துகேட்பு கூட்டம் நடத்தி அரசுக்கு உரிய வழிமுறையில் அனுப்ப வேண்டும்.

* வழிகாட்டி மதிப்பை குறைத்து பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தேவையில்லாமல் 47 ஏ நடவடிக்கைக்கு ஆவணத்தை உட்படுத்தக்கூடாது. 47ஏ இது தொடர்பாக கண்காணிப்பு செய்ய வேண்டும்.

* பொதுமக்களை கனிவுடன் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. குக்கிராமம் மற்றும் தாலுகா வாரியாக கிராமங்கள் மறுசீரமைப்பை விரைவு படுத்தி முடிக்க வேண்டும்.

Related Stories: