×

உக்ரைன் விவகாரத்தில் 'ரஷ்யாவின் செயல் தவறு; இந்தியா சுட்டிக்காட்டாமல் மவுனம் காப்பது வேதனைக்குரிய விஷயம்': சசிதரூர் பேட்டி

டெல்லி: உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை இந்தியா கண்டித்திருக்க வேண்டும். ஒரு நாட்டில் அமைதி நிலவ இந்தியா காரணமாக இருப்பது நல்லது தானே என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் உக்ரைனில் அப்பாவி மக்கள் உள்பட ராணுவ வீரர்களும் பலியாகி வருகின்றனர். உக்ரைனின் பதில் தாக்குதலால் ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பதோடு, ஹெலிகாப்டர்கள், விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படுகின்றன. இதனால் இருநாடுகளுக்கும் இழப்பு ஏற்படுகிறது. மேலும் பிற நாடுகளுக்கும் பொருளாதாரம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும் நிலையும் உருவாகிறது.

இதனால் போரை நிறுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் ரஷ்யாவிடம் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரஷ்யாவுடன், நட்பு நாடாக உள்ள இந்தியா இதில் தலையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று, ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தில் இந்தியா நடுநிலைமையான நிலைப்பாட்டில் உள்ளது. போரை நிறுத்துங்கள். நேட்டோ - ரஷ்யா இடையேயான பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அக்கட்சியின் எம்.பி.யான சசிதரூர் கூறுகையில், ரஷ்யா நமக்கு நட்பு நாடாக இருக்கலாம். ஆனால் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் அதனை இந்தியா கண்டிக்காமல் மவுனம் சாதிக்கிறது. இதை உக்ரைனும் அதன் நட்பு நாடுகளும் ஏமாற்றமாக பார்க்கிறது. இந்தியாவின் செயல் அவர்களுக்கு வருத்தம் அளிக்கிறது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லை தொடர்பான கோட்பாடுகள் மீறப்படும்போது இந்தியா போன்ற நாடு அமைதியாக இருப்பது சரியல்ல.

ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா சமரசம் செய்ய வேண்டும் என உக்ரைன் விரும்புகிறது. உக்ரைனின் விருப்பம் முழுவதுமாக ஏற்றுகொள்ளும் படியாகவே இருக்கிறது. ஒருநாட்டில் அமைதி நிலவ இந்தியா உதவுவது என்பது நல்லது தான். இருநாடுகளும் ஒன்றையொன்று தாக்கும் சந்தர்ப்பத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஒன்றிய அரசு கூறியிருக்கலாம். ஆனால் இங்கு அப்படி இல்லை. ஒரு நாடு மற்றொரு நாட்டின் எல்லையை மீறி சென்று தாக்குகிறது. இதனை இந்தியா கண்டித்திருக்க வேண்டும். ரஷ்யாவின் செயல் தவறு என சுட்டி காட்டிருக்க வேண்டும் என சசிதரூர்  கூறியுள்ளார்.

Tags : Ukraine ,Russia ,India ,Sachitharur , Ukraine, Russia, fault, India, pain, Sachitharur
× RELATED உக்ரைன் போருக்கு மத்தியில் அணு ஆயுத போர் பயிற்சி: ரஷ்யா பகிரங்க அறிவிப்பு