×

காடையாம்பட்டி அருகே முன்விரோதத்தில் ஜல்லி கிரஷர் நிறுவனத்தில் நள்ளிரவில் காவலாளியை வெட்டிக்கொன்ற வாலிபர்-ஒன்றும் தெரியாதது போல் நின்றவரை மோப்ப நாய் கவ்வியது

காடையாம்பட்டி, : காடையாம்பட்டி அருகே தனியார் ஜல்லி கிரஷர் காவலாளி வெட்டி கொலை செய்யப்பட்டார். சிசிடிவி பதிவில் சிக்கியவர் ஒன்றும் தெரியாதது போல் நின்றிருந்த போது, மோப்பநாய் அவரை காட்டிக்கொடுத்தது. முன்விரோதத்தில் சித்தப்பாவையே கொலை செய்ததும், அவர் ஏற்கனவே ஆந்திராவில் செம்மரம் கடத்திய வழக்கில் கைதானவர் என்பதும் தெரியவந்துள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த நாராயணன், காடையாம்பட்டி அடுத்த உம்பிலிக்கம்பட்டி கிராமத்தில் ஜல்லி கிரஷர் வைத்துள்ளார். இவரது கிரஷரில் நடுப்பட்டி அடுத்த காக்காயன்காடு பகுதியை சேர்ந்த சேகர்(45) என்பவர், இவர் கடந்த 3 ஆண்டுகளாக காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். திருமணமான இவருக்கு மனைவி, இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் மகள்களுக்கு திருமணமாகி விட்டது. மகன் சேலம் அரசு கல்லூரியில் படித்து வருகிறார். சேகர் அதே பகுதியில் ஆடு, மாடு வைத்து பகலில் மேய்த்து வருகிறார். இரவில் நாராயணனின் ஜல்லி கிரசரில் காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ஜல்லி கிரஷரில் வேலை செய்தார்.

இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு வேலைக்கு வந்த சிலர், அங்கு சேகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனார். இதுகுறித்து கிரஷர் உரிமையாளர் நாராயணனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர், தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா, தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் அனந்தகுமார், எஸ்ஐக்கள் பழனிச்சாமி, செல்வம் மற்றும் போலீசார், சேகரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். கிரஷரில் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். \

அதில் நள்ளிரவு நேரத்தில் ஜல்லி கிரஷர் பகுதிக்கு ஒருவர் வந்து சென்றது தெரியவந்தது. மேலும், சிசிடிவி கேமராவில் பதிவான வாலிபர், அதே பகுதியில் உலாவிக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதை போலீசாரும் தனியாக நோட்டமிட்டு வந்தனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்பி ஸ்ரீ அபினவ் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, அது கொலை செய்யப்பட்ட உடல் கிடந்த இடத்தில் இருந்து ஓடி, கொலையை செய்துவிட்டு எதுவுமே நடக்காதது போல், அங்கேயே நின்றிருந்த வாலிபர் அருகே சென்று நின்றது. இதையடுத்து போலீசார் அவரை சுற்றி வளைத்தனர்.

இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகையை பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு வாலிபரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர் கொலை செய்யப்பட்ட சேகரின் அண்ணன் அண்ணாதுரை மகன் அண்ணாமலை(30) என்பது தெரியவந்தது. ஏற்கனவே கிரஷரில் அண்ணாமலை காவலாளியாக வேலை பார்த்ததும், அவர்களுக்குள் நிலப்பிரச்னை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததும் தெரியவந்தது. தனது வேலைக்கும், நிலப்பிரச்னையில் இடையூறாக உள்ள சித்தப்பா சேகரை, அவர் கத்தியால் குத்தி கொலை செய்ததும் தெரியவந்தது.

கொலையில் ஈடுபட்ட அண்ணாமலைக்கு செல்வி என்ற மனைவியும், இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். இவர் ஏற்கனவே ஆந்திராவில் செம்மர கட்டை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர். தொடர்ந்து அண்ணாமலையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலை மற்றும் நிலப்பிரச்னையில் சித்தப்பாவை கொலை செய்துவிட்டு, யாருக்கும் தெரியாதது போல், அங்கேயே நின்று, மோப்ப நாயால் அண்ணாமலை பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Jalli Crusher Company ,Kadayampatti , Kadayampatti,: A private jalli crusher guard was hacked to death near Kadayampatti. Nothing stuck in the CCTV recording
× RELATED காடையாம்பட்டி அருகே பயங்கரம் வெடி...